பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

பெஞ்சமின் ஃபிராங்ளினின்

ஆரோக்கியமாக வாழவேண்டும் என்று அக்கறை கொண்டார் பெஞ்சமின்.

முதலாக, அவர் அச்சாளராக இருந்ததால் அந்த தொழிலாளர்கள் நிலை என்ன? ஏதாவது சொந்தமாக, பாத்திரத்தொழில் நடத்துபவர், பானை வளையும் குயவர்கள் வாழ்க்கை நிலை, வண்ணமடித்து வாழும் ஏழை சுண்ணாம்புக்காரர் அல்லது பெயிண்டர், உலோகங்களுக்கு இடையே மாட்டிக் கொண்டு காலாகாலமாய் வேலை செய்யும் தொழிலாளர்கள் சுகமாக, தேகாரோக்கியமாக, திட காத்திரமாக அவர்களால் ஏன் வாழ முடிவதில்லை என்பதை நாள்தோறும் தனது அனுபவத்துக்கு ஏற்றவாறு ஆராய்ந்தார்.

இவர்கள் எல்லாருக்கும் நோயென்று ஒன்று வந்தால், நோய் ஒரே மாதிரியாகவே அவர்கள் அனைவரையும் தாக்குவது ஏன்? என்றும் சிந்தித்தார்.

இந்த தொழிலாளர்கள் எல்லாம் வெள்ளை ஈயத்தைக் கையாள்பவர்கள். இந்த ஈயம் விஷத்தன்மை கலந்தது. அவர்கள் ஆயுள் முழுவதும் இந்த வெள்ளை ஈய உலகத்தோடே போராடுவதால், இறுதியில் அவர்கள் ஒருவித விஷநோயால், பாதிக்கப்பட்டு மரணமடைகிறார்கள் என்று பெஞ்சமின் ஃபிராங்ளின் கண்டு பிடித்தார்.

பெஞ்சமின், எம்.பி.பி.எஸ். அல்லது எம்.டி படித்துப் பட்டங்கள் பெற்ற ஒரு டாக்டரும் அல்லர். ஆனால், மருத்துவத்துறையிலே ஒரு விதமான புதிய விஷநோய் ஊடுருவியுள்ளதை அதுவரை எவரும் கண்டுபிடித்திராதபோது முதன்முதலில் கண்டு பிடித்து மனித இனத்தை எச்சரித்து மறைந்த ஒரு மாமனிதர் பெஞ்சமின்.