20. அரசின் அடக்குமுறை:
புரட்சி ஏடு நின்றது பகுத்தறிவு
ஏட்டின் பணி தொடங்கியது
இருபதாம் நூற்றாண்டின், முப்பதுகளில் உலகில் ஒரே சமதர்ம நாடுதான் இருந்தது. அந்த முதல் சமதர்ம நாடு, முதல் தரமான சமதர்ம நாடாக விளங்கியது. இருபது ஆண்டுகளுக்குள் அது சாதித்தவை பல. எல்லோருக்கும் எழுத்தறிவு; எல்லோருக்கும் வேலை; எல்லோருக்கும் நல்வாழ்வு உறுதியாகி விட்டது. அந்த நாட்டின் சிறப்புகளும், சாதனைகளும் இந்தியாவிற்குத் தெரிய ஒட்டாதபடி ஆங்கில ஆட்சி இருட்டடிப்பு செய்தது.
இருப்பினும், பெரியாரின் ‘புரட்சி’ இதழ் வாயிலாக, அவை தமிழ்நாட்டின் மூலை, முடுக்குகளிலும் பரவின. ஒரே சமயத்தில், படித்தவர்களிடையிலும், பாட்டாளிகளிடையிலும் சமதர்ம உணர்வினை வளர்ப்பதில், ‘புரட்சி’ இதழ் இணையற்ற வெற்றி பெற்று வந்தது. அதனால், அன்று இந்தியாவை ஆண்ட ஆங்கில ஆட்சி எரிச்சல் கொண்டது; அடக்குமுறையில் இறங்கிற்று.
‘புரட்சி’யிடம் நன்னடக்கைப் பணம் கேட்டது. பெரியார் அதற்கு உடன்படவில்லை; புரட்சி நின்றது. அதற்குப் பதில் ‘பகுத்தறிவு’ தோன்றியது. எப்போது? 1934 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் கடைசி வாரத்தில். அது தன் கொள்கையை, முதல் தலையங்கத்தில் வெளிப்படுத்தியது.
‘பகுத்தறிவு’ எதற்குப் பாடுபடும்?
‘எங்கும் நிறைந்த இறைவனை வழுத்தவோ,
‘எல்லாம் வல்ல மன்னனை வாழ்த்தவோ,
‘யாதினும் மேம்பட்ட வேதியனை வணங்கவோ,
‘ஏதும் செய்ய வல்ல செல்வவானை வாழிய செப்பவோ, கருதியோ அல்ல; மாறாக, மனித சமூக ஜீவாபிமானத்தையும், ஒற்றுமையையும் பிரதானமாகக் கருதி உழைத்து வரும்.