உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்நாடா? திராவிடநாடா?

127

கொடுத்து விடும் காலம் வந்த போது, ‘மொத்தமாகக் கொடுத்து விட்டு ஓடாதே; அவர் அவரிடமிருந்து எடுத்ததை, அவர் அவரிடமே கணக்குச் சொல்லி, கொடுத்து விட்டுப் போ’ என்று சொல்ல மாட்டோமா?

அதைப் போலவே, ‘எத்தனையோ மன்னர்களிடமிருந்து பறித்த ஆட்சி உரிமையை, அந்தந்தப் பகுதி மக்களிடம் ஒப்படைத்து விட்டுப் போ’ என்று கேட்கத் தோன்றிற்று.

இத்தகைய சிந்தனை, அரசியல் உலகில், எங்காவது எழுந்தது உண்டா? உண்டு. எங்கே எழுந்தது? சோவியத் நாட்டில் எழுந்தது; செயல்பட்டது. எப்போது? எப்படி?

இரஷ்ய மக்களின்—மன்னராகத் தோன்றிய சார், அக்கம் பக்கத்தில் இருந்த பிற மன்னர்களை, ஆட்சிகளைக் கவிழ்த்து விட்டு, பல இன மக்களை சாரின் பேரரசில் இணைத்து, அடக்கி வைத்திருந்தான். இது இந்திய மக்களை, ஆங்கிலேயர் ஒரு கூண்டுக்குள் அடைத்து ஆண்டதற்கு ஒப்பாகும்.

1917 அக்டோபரில் வெடித்த, உலகத்தின் மாபெரும் புரட்சி, சார் ஆட்சியைத் தொலைத்தது; பாட்டாளி ஆட்சியை அமைத்தது; சமதர்ம ஆட்சியைக் கொண்டு வந்தது. அதோடு நிற்கவில்லை. சிலருக்குத் தனி நாடு தந்தது. அக்டோபர் புரட்சியின் தலைவரும், சோவியத் முறையின் தந்தையுமான, பிரதமர் லெனின், சார் பிடித்த மண்ணெல்லாம் புதிய ஆட்சியில் இருக்க வேண்டுமெனக் கூறி, அடக்கி வைக்க முயன்றாரா? இல்லை. மாறாக, இரஷ்யரல்லாத பிற இன மக்களுக்கு, சுய நிர்ணய உரிமை உண்டு. அவர்கள் விரும்பினால், இரஷ்யாவிலிருந்து பிரிந்து போகலாம்; தங்களுக்கேற்ற ஆட்சி முறையை அமைத்துக் கொள்ள, அவர்களுக்கு உரிமை உண்டு என்று அறிவிப்பு செய்தார்.

அது ஏட்டு அறிவிப்பு அல்ல; நடைமுறைக்கு வந்த உரிமையாகும். அவ்வுரிமையைப் பயன்படுத்தி, எஸ்பெக்கியர், அர்மீனியர் போன்றவர்கள், இரஷ்யாவிலிருந்து பிரிந்து போனார்கள். தனியாட்சி நிறுவிக் கொண்டார்கள்; சமதர்ம ஆட்சியை உருவாக்கிக் கொண்டார்கள்; சில ஆண்டுகளுக்குப் பிறகு, பெரிய சமதர்ம ஒன்றியம் மிக நல்லது என்று அவர்கள் எண்ணித் தாமாகவே, சமத்துவ அடிப்படையில் இரஷ்ஷிய சமதர்ம