உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29. கம்யூனிஸ்டுகள்
வேட்டையாடப் பட்டனர்
பெரியார் அடைக்கலம் தந்தார்

சென்னை மாகாணத்தைப் பொறுத்த மட்டில், பொது உடைமைக் கட்சியின் மேல், கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்கு முறையை, கொடுமைகளை ஊரறியச் செய்ததில், முதல் இடம் எவருடையது? தந்தை பெரியாருடையது ஆகும்; அவருடைய இயக்கத்திற்கு உரியதாகும்; ‘விடுதலை’ நாளிதழுக்கு உரியதாகும்.

தந்தை பெரியாருக்கு இருந்த பல சிறப்புகளில் ஒன்று, வருமுன் அறிதல் ஆகும். காங்கிரசு ஆட்சியின் கைகளில் ஒப்படைக்கும் ஆட்சி மாற்றம், வெறும் ஆள் மாற்றமே; அடிப்படைத் தன்மையில், எவ்வித மாற்றமும் இராது; பொதுமக்களுக்குக் ‘கெடுதலையாகவே இருக்கு’மென்று பெரியார் அறிவித்தார்.

ஏதோ பெரியாருக்குத் தெரியாததைத் தாங்கள் தெரிந்து கொண்டிருப்பதைப் போலவும், பெரியாரை விட அதிகமாக இந்நாட்டின் விடுதலைக்குப் போராடியவர்கள் போலவும், சிலர் வெவ்வேறு முத்திரைகளில் விடுதலை நாளைக் கொண்டாடுவதில் பரம்பரை பக்தர்களைப் போல முனைந்தார்கள். அது அடிப்படை ஆதாரம் இல்லாத ஆர்வம் என்பதை அப்போதைய அரசின் கெடுபிடிகள், பொது உடைமைக் கட்சியை ஒழிக்க எடுத்த நடவடிக்கைகள் ஆகியவை புலப்படுத்தின.

பொது உடைமைக் கொள்கைக்கும், பொது உடைமைக் கட்சிக்கும் எதிராக முடுக்கி விடப்பட்ட அடக்கு முறை பற்றி பெரியார் என்ன கூறினார்?

‘இந்தியாவை ஆள வந்தோர் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற முதலாளித்துவ நாடுகளின் தூண்டுதலால், வற்புறுத்தலால். அந்நாடுகளின் ஆட்சிக்குக் கொடுத்த வாக்குறுதிப்படி பொது உடைமைக் கொள்கைப் பரப்புதலைத் தடுத்து நிறுத்த முனைகிறார்கள்’ என்று பொருள் படும்படி அறிவித்தார்.