கம்யூனிஸ்டுகள் வேட்டையாடப் பட்டனர்
157
சேலம் சிறையில் இருபத்து இரண்டு பொதுஉடைமைக் கட்சியினரைச் சுட்டுக் கொன்றது, தமிழ் மக்கள் சிந்தனையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. கடலூர் சிறை போன்றவைகளிலும் ‘கட்டுப்பாடு’ என்ற பெயரில், சில படுகொலைகள் நடந்தன. இக்கொடுமைகளைச் சுடச்சுட கண்டித்தது ‘விடுதலை’.
அடக்கு முறை அளவுக்கு மேல் போகும் போது, நேர் எதிர் பலனையே கொடுக்கும். சென்னை மாகாணத்தில் அப்படிப்பட்ட நிலை உருவானது. பொதுமக்கள் காங்கிரசிடம் வைத்திருந்த மதிப்பை இழந்தார்கள். அது ஆட்சிக்கு வந்த பிறகு, காந்தீய வழியை விட்டு, அடக்கு முறை வழிக்குப் போய் விட்டதாக வாக்காளர்கள் கருதத் தொடங்கினார்கள். ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நான்கு ஆண்டுகளில், காந்தியடிகளின் தலைமையில் பல்லாண்டுகளாகத் திரட்டிய மக்களின் பரிவைப் பறி கொடுத்தார்கள்.
அந்நிலையை உணர்ந்த அனைத்திந்திய பொது உடைமைக் கட்சியின் தலைவர்கள் கூடி, பழைய போராட்ட முறைகளைக் கை விட்டு விட்டு, தேர்தல் களங்களில் இறங்கி, நாடாளுமன்ற, சட்ட மன்றத் தேர்தலுக்கு நின்று, பொது உடைமைக் கொள்கையைப் பரப்புவது என்று முடிவு செய்தார்கள். பின்னர், அம்முடிவைப் பம்பாயில் கூடிய மாநாடு உறுதிப்படுத்தியது.
தேர்தலுக்கு நிற்பதென்றால், தேர்தல் உடன்பாடு என்ற நிலை உருவாவது இயற்கை. அத்தகைய உடன்பாடும், கூட்டணியும் ஆங்காங்கே தோன்றின.
சென்னை மாகாணத்தில், காங்கிரசிற்கு எதிராக ஓர் அய்க்கிய முன்னணி உருவாயிற்று. அதற்குத் தந்தை பெரியார் ஈ. வெ. ராமசாமி உதவி செய்தார்; ஆதரவாக நின்றார்; ஆதரவு தரும்படி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
திராவிடர் கழகத்தவர் தேர்தலில் நிற்கக் கூடாது என்னும் கொள்கையை மீண்டும் வலியுறுத்தி விட்டு, வாக்காளர் எவருக்கு வாக்களிப்பது என்று வழி காட்டினார்.
‘பொது மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்பட்டு, முற்போக்குச் சிந்தனைகளை நசுக்க முயன்ற, காங்கிரசு ஆட்சிகளை வெளியேற்றுவதே குறிக்கோள், பொது உடைமை வேட்பாளர்களை ஆதரித்து வெற்றி பெறச் செய்வது, அதற்குப் பெரிதும் உதவியாக இருக்கும். அப்படிச் செய்யுங்கள்,