உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

பெரியாரும்‌ சமதர்மமும்‌

அத்திட்டம் வெளியான அன்று, தமிழ் நாடு காங்கிரசின் தலைவர் காமராசர், விருதுநகரில் இருந்தார். அவருக்கு அதிலுள்ள கேடு பளிச்சென்று புரிந்தது. அன்று மாலை, விருதுநகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய காமராசர், ‘இந்தப் பைத்தியக்காரத் திட்டத்தை ஒழித்து விட்டுத்தான் மறு வேலை,’ என்று சூளுரைத்தார். அப்போது அது, இயக்குநரின் விபரீத திட்டம் என்றுதான் அவர் நினைத்தார். இராஜாஜி திட்டம் என்பது, பின்னரே தெரிய வந்தது.

அத்திட்டம் வெளியானதும் அதைக் கண்டித்து, தந்தை பெரியார் அறிக்கை விட்டார். மாகாண கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் கண்டன அறிக்கை விட்டார். அறிஞர் அண்ணாவின் அறிக்கையும், அப்படியே அமைந்தது. தென்னிந்திய ஆசிரியர் கழகத்தின் தலைவர், இக்கல்வியைக் கண்டித்து அறிக்கை விட்டார். இராஜாஜியிடம் பற்றுடைய டாக்டர் சுப்பராயன் கண்டித்தார். முன்னாள் முதல் அமைச்சர், ஓமந்தூர் இராமசாமியார் எதிர்ப்புத் தெரிவித்தார். அதிகார வர்க்கமும், பிற்காலத்தில் சுதந்திரா அணிக்குத் தாவப் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த ‘தேசியவாதி’களும் மட்டுமே, அப்பன் தொழிலுக்குப் பிள்ளை போகும் கல்வி முறையை வரவேற்றார்கள்.

குலக் கல்வித் திட்டத்திற்கு எதிராக, கையெழுத்து வாங்கும் முயற்சியில், காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர்களே முனைந்தார்கள். பெரும்பாலோர், எதிர்த்துக் கையெழுத்திட்டார்கள்.

இதற்குள், குலக் கல்வித் திட்டம், முதல் அமைச்சர் இராசகோபாலாச்சாரியார் பெற்றெடுத்த கோரப் பிள்ளை என்பது, காமராசருக்குத் தெரிய வந்தது. அவருடைய நிலை, தர்ம சங்கடமாகி விட்டது. பொது மக்களுக்குக் கேடான ‘அரை வேளைப் படிப்பு’ என்கிற முறையை ஒழித்தாக வேண்டும்; அதே நேரத்தில், இராசகோபாலாச்சாரியாருக்கு எந்த வித பெருமைக் குறைவும் ஏற்படாதபடி, பார்த்துக் கொள்ள வேண்டும்.

இத்தகைய சங்கடமான நிலையில், சட்ட மன்றக் காங்கிரசு கட்சிக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் இராஜாஜி, ‘புதிய கல்வித் திட்டத்தைக் கை விட்டால், எதிர்க் கட்சிகளின், குறிப்பாக, திராவிடர் கழகத்தின் கை ஓங்கி விடும். சட்டமன்றத்தைக் கலைக்கும் நிலை ஏற்படலாம்’ என்று பொடி வைத்துப் பேசினார். அந்த நயமான மிரட்டல், ஓரளவு பயன்பட்டது. காங்கிரசு உறுப்பினர்கள்