உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராஜாஜி மீண்டும் திசை திருப்பினார்

175

தங்கள் கருத்துக்களை மறந்து விட்டு, அரசிற்கு ஆதரவு கொடுக்கும்படி, கட்டளையிடப்பட்டார்கள். இராஜாஜியே, அச்சோதனையின் விளைவைக் கவனித்த பிறகு, புதிய திட்டத்தைக் கை விட்டு விடுவார் என்று தங்களைத் தாங்களே தேற்றிக் கொண்டார்கள்.

சட்ட மன்றக் கூட்டம் வந்தது. மன்றம் குலக் கல்வித் திட்டத்தை ஆலோசனைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்ற அரசின் தீர்மானம் வந்தது. அத்திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டுமென்ற திருத்தம், பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேறியது.

முதலமைச்சர், அடிப்படையான திட்டம் என்று கருதிய ஒன்றை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தள்ளி விட்ட பிறகு, அத்திட்டத்தை உடனே எடுத்து விடுதல் அல்லது பதவியிலிருந்து விலகிக் கொள்ளல் என்பதே சரியான செயல்பாடு ஆகும்.

தேர்தலுக்கு நிற்காது, ஆளுநர் நியமன வழியாகச் சட்டமன்ற மேலவைக்கு வந்து, முதல் அமைச்சரானவர் பாராளுமன்ற மரபினைப் பின்பற்றவில்லை. சாதாரண அரசியல்வாதியின் நிலைக்குத் தாழ்ந்து போனார். அடிப்படையான திட்டம் பற்றி, அரசு கொண்டு வந்த தீர்மானத்திற்குத் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றியது வெறும் பரிந்துரையே ஆகும் என்று வாதாடினார்.

மேற்படி தீர்மானம் நிறைவேறியதற்கு அடுத்த நாளே, இணைந்த சென்னை மாகாண சட்டமன்றத்தின் கடைசிக் கூட்டம். அதற்குப் பிறகு, ஆந்திர மாகாணம் பிரிந்து விடும்.

கடைசி நாளன்று, ஏழைகளுக்கு நிலம் ஒதுக்குவது பற்றிய தீர்மானம் ஒன்றை, எதிர்க் கட்சி உறுப்பினர் சட்ட மன்றத்தின் முன் கொண்டு வந்தார். அதை வற்புறுத்த வேண்டாமென்று அரசு சார்பில் கோரப்பட்டது.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர், அன்று மன்றத்திற்கு வரவில்லை; பலர் ஊர் திரும்பி விட்டார்கள். அன்று அரசிற்கு ஆதரவாளர்களே அதிகமாக வந்திருப்பதும் புலப்பட்டது. இந்நிலையை எடுத்துக் காட்டியதையும் பொருட்படுத்தாது, தீர்மானத்தின் மேல் வாக்கெடுக்க வேண்டுமென்று கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தியது. அப்படியே எடுக்கப்பட்டது. விளைவு? எதிர்க்கட்சி உறுப்பினர் திரு. வெங்கையாவின் தீர்மானம்