உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. கோயில் சொத்துக்களும்
ஊதிய உச்சவரம்பும்

‘செங்கோலுக்கு முன்னே சங்கீதமா?’ என்பது நாட்டு வழக்கு.இதன் பொருள் என்ன? சட்டத்திற்கு முன்னே, எந்தப் பாட்டும் செல்லாது என்பதாகும். சமுதாயத்தில், நாட்டில் நடக்க வேண்டிய அடிப்படை மாற்றங்கள், சட்ட வலிமையால் மட்டுமே நடக்கும். வெறும் அறிவுரைகளும், அருளுரைகளும் போதிய பயனைக் கொடுக்காது.

குழந்தை மணம் கூடாது என்று எத்தனையோ முற்போக்காளர்கள் உணர்ந்தார்கள்; அவர்களில் துணிச்சலுடையோர் ஊரறிய உரைத்தார்கள்; ஆனால், கேட்டு நடந்தவர்களோ சிலர். இப்படிப் பல்லாண்டுகள் கழிந்த பின், குழந்தை மணங்களைத் தடுக்கும் ‘சாரதா சட்டம்’ என்ற பெயரில் ஓர் சட்டம் 1930இல் இயற்றப்பட்டது. அப்போது பெண்களுக்குக் குறைந்த அளவு திருமண வயது, பதினான்காக இருக்க வேண்டுமென்று சட்டம் கூறிற்று. அதைக் கூட மீறுவோர், இந்தியாவின் பல மாநிலங்களில் பலர் ஆவார். இன்றையத் தமிழ்நாட்டில் அத்தகையோர் இல்லை என்றே சொல்லி விடலாம். தமிழ்ச் சமுதாயத்திற்கு, அந்த அளவு அறிவு வரக் காரணமாயிருந்தவர் எவர்? தந்தை பெரியாரும், அவர் தோற்றுவித்த தன்மான இயக்கமுமே. பெரியாரைப் போன்ற புரட்சியாளரையும், தன்மான இயக்கத்தைப் போன்ற புரட்சி இயக்கத்தையும் பெறாததால், பல மாநிலங்கள் இன்னும் இருட்டறையில் உள்ளன. இதிலிருந்து என்ன தெரிகிறது? பரவலான, பயனுள்ள, நிலையான, தலை கீழ் மாற்றங்களை உருவாக்க, மக்கள் மனங்களை மாற்றும் இடைவிடாத பிரசாரமும், அதற்குச் செயல் வடிவம் கொடுக்கும் சட்டங்களும் தேவை என்பது தெரிகிறது. இதை, ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்கு முன்பே, தன்மான இயக்கத்தவர்கள் உணர்ந்தார்கள். அதன் விளைவு?

‘பிறப்பின் பேரால் ஏற்பட்ட சமூகக் கொடுமையையும், வேற்றுமையையும் அடியோடு ஒழிப்பதற்கு எடுத்துக் கொண்ட முயற்சிகள், பெரிதும் அவைகளைக் காப்பாற்ற ஏற்பட்டவர்களின்