உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14. குடிஅரசு ஏடு
அடக்குமுறைக்கு ஆளானது

தமிழகத்தில் சுயமரியாதை சமதர்மக் கழகங்கள் தோற்றுவிக்கப்பட்ட கால கட்டத்தில், இந்திய அரசு மட்டத்தில், சமதர்மக் கொள்கை பரவுவதை அடக்கி விட, முடிவு செய்யப்பட்டது. இந்திய அரசின் முடிவை, மாகாண ஆட்சிகள் நிறைவேற்றக் கடமைப் பட்டிருந்தன.

சென்னை மாகாண அரசின் கவனம் பெரியார் பேரிலும், அவர் நடத்தி வந்த குடிஅரசின் மேலும் பாய்ந்தது. மீரத் சதி வழக்கின் முடிவைப் பற்றி உணர்ச்சி மிக்க தலையங்கம் தீட்டிய ‘குடிஅரசு’, தோழர் சிங்காரவேலரால் பாராட்டப்பட்ட குடிஅரசு, அடக்கு முறைக்கு ஆளானது.

மாகாண ஆட்சியின் ஆணைப்படி, காவல் துறை அலுவலர்கள் ‘குடிஅரசு’ அலுவலகத்தைத் திடீரெனச் சோதனை செய்தார்கள். ஆட்சேபகரமான கட்டுரைகள் இருந்ததாகக் காட்டி, குடிஅரசிற்குக் காப்புப் பணம் கேட்டார்கள். பெரியாரிடம் பணம் இருந்தாலும், காப்புப் பணம் கட்ட விரும்பவில்லை. எனவே, ‘குடிஅரசை’ நிறுத்தி விட்டார். அதற்குப் பதில் ‘புரட்சி’ என்ற பெயரில், ஓர் வார இதழைத் தொடங்கினார். என்னே பெரியாரின் துணிச்சல்!

புதிய வார இதழுக்குப் ‘புரட்சி’ என்று பெயர் சூட்டியதில் மட்டுமா அவருக்கே உரிய துணிச்சலைக் காட்டினார்? அதன் உள்ளடக்கமும், துணிச்சலின் வெளிப்பாடாக விளக்கியது.

26-9-1933இல் ‘புரட்சி’யின் முதல் மலர் வெளியாயிற்று அதன் தலையங்கத்தில், பெரியார் எழுத்தைக் காண்போம். அது இதோ:

“குடிஅரசை ஒழிக்கச் செய்த முயற்சியால் ‘புரட்சி’ தோன்ற வேண்டியதாயிற்று. உண்மையிலேயே பாமர மக்களின், அதாவது, பெரும்பான்மையான மக்களின் ஆட்சியாகிய குடிஅரசுக்கு