உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியார்—ஒரு சகாப்தம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

வர்கள் அவற்றை விட்டு விட்டு வெளியே வருவது ஒருபுறம் இருந்தாலும் ஒருவர் கையில் ஒரு பலாப்பழத்தைக் கொடுத்து ஒரு மணி நேரம் அதை உற்றுப்பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமென்றால், வைத்திருப்பவர் வாயில் நீர் ஊரும்; நேரம் செல்லச் செல்ல பலாச்சுளையில் மொய்த்துக்கொண்டிருக்கிற ஈயோடு சேர்த்துச் சாப்பிடுவார்களே தவிர, பார்த்துக் கொண்டே இருக்கமாட்டார்கள்.

பெரியார் குடும்பத்தின் சிறப்பு

பெரியார் குடும்பத்தின் நிலை எப்படிப்பட்டது? எந்தப் பக்கம் திரும்பினாலும் குடும்பச் செல்வாக்கு; எப்பக்கம் திரும்பினாலும் வாணிபத்தில் ஆதாயம்;நிலபுலன்கள், வீடுவாசல்கள், இவைகள் எல்லாவற்றையும் பார்த்து, 'இவைகள் எனக்குத் தேவை இல்லை' என்றார். 'என் நாட்டு மக்களுக்கு, அறியாமையில் மூழ்கிக்கிடக்கும் நாட்டு மக்களுக்கு, நல்லது கெட்டது ஆராய்ந்து பார்க்கும் பக்குவம் அற்றுப்போயிருக்கும் மக்களுக்கு வேறு ஒரு செல்வத்தைத் தருவேன்; அறிவுச் செல்வத்தைத்தரப் போகின்றேன்; சிந்தனைச் செல்வத்தைத் தரப் போகிறேன்; பகுத்தறிவுச் செல்வத்தைத்தரப் போகிறேன்; அவற்றை ஏற்று நடக்கத்தக்க துணிவைத் தரப்போகிறேன்; அதைத் தடுப்பார் எவரேனும் குறுக்கிடுவார்களானால், அவர்களுடைய ஆற்றல்களையும் முறியடிப்பேன்;—இதுதான் என்னுடைய வாழ்க்கையின் குறிக்கோள்' என்று அவர்கள் கிளம்பினார்கள், அதுதான் வாழ்க்கையின் முதல் போராட்டத்தில் அவர் பெற்ற வெற்றி!

பெரியாரின் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி

அதற்குப் பிறகு அவர்கள் சந்தித்த ஒவ்வொரு களத்திலேயும் வெற்றிதான் கிடைத்திருக்கிறது. அந்த வெற்றிகள் எல்லாம் நாம் எடுத்துக்கொண்டிருக்கிற காரியங்களுக்குப் போதுமானதாக அமையவில்லையென்று செட்டிநாட்டரசர் அவர்கள் சொன்னார்கள்.