2
ஒருவரைத் தலைவராகப் பெறவில்லை ; அந்த அவசியமும் வரவில்லை. அன்று ஏற்றுக்கொண்டது போல் இன்றும் அவரையே தலைவராகக் கொண்டுதான் பணி செய்து வருகின்றேன்.
கருத்து வேற்றுமை இருப்பினும்
குறிக்கோள் ஒன்றே
ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள் என்றாலும் ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு இருக்கலாம். குடும்பத்தில், அப்பன்—மகன்—அண்ணன்—தம்பி அவரவர்களுக்கு ஒரு கொள்கை ! அவரவர் கொள்கை அவரவருக்குப் பெரிது.
'கடவுள் கதைகளிலிருந்து மனித சமுதாயத்தைத் திருத்தலாம்; மனித சமுதாயத்தை முன்னேற்றலாம்' என்று குன்றக்குடி அடிகளார் கருதுகின்றார்; அத்துறையின் மூலம் தொண்டாற்றிவருகின்றார். கடவுள் கதைகள் மனித சமுதாயத்தைக் கெடுக்கிறது என்பதை எடுத்துக்காட்டும்போது அவமானம் புழுங்குவதில்லை. மதத்துறையில் நின்று மனித சமுதாயத்தை முன்னேற்றலாம் என அவர் கருதுகின்றார். நாம் பகுத்தறிவுத் துறையால்தான் மனித சமுதாயம் முன்னேற முடியும், என்று கருதித் தொண்டாற்றி வருகிறோம். நாமும் முழு அளவு வெற்றி பெற்றோமா என்றால் இல்லை; அவரும் முழு அளவு வெற்றி பெற்றார் என்றால் இல்லை. நமது வெற்றியைப்பற்றி நாமும் சந்தேகப்படுகிறோம்; அவரும் அவரது வெற்றி குறித்து சந்தேகப்படுகிறார். அவரவர்கள் நேர்மையாக நடந்து, தங்கள் துறையில் தொண்டாற்ற வேண்டும்.
சுயமரியாதை இயக்கத்தின் சிறப்பு
சுயமரியாதை இயக்கம் ஒழுக்கச் சிதைவு இயக்கமல்ல.மனித சமுதாயத்தை ஒழுக்க நெறிக்குக் கொண்டுவந்து முன்னேற்ற வேண்டுமென்பதற்குப் பாடுபடும் இயக்கமாகும். முதல் முதல் உள்ளத்தில் சுயமரியாதை இயக்கம், அடுத்துப் பகுத்தறிவு இயக்கம். பிறகு தமிழ் இயக்கத்தோடும் பிணைத்துக்கொண்டது.