பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. புரட்சியின் இரண்டாவது வழி திருக்களிற்றுப்படியார் கூறும் மெல்வினை, வல்வினை என்பன யாவை? தொண்டை மேற்கொண்ட அடியார்களுள் வன்முறை என்பதையும் பயன்படுத்தித் தம் தொண்டைச் செய்தவர்கள் பலருடைய வாழ்வைச் சேக்கிழார் எவ்வாறு விளக்குகிறார் என்பதை முன்னர்க் கண்டோம். தொண்டு செய்ய வேண்டு மானால் வன் முறையைத் தான் கைக் கொள்ள வேண்டும் என்ற இன்றியமையாமை இல்லை. தேவைக்கு ஏற்ப ஒரு சிலர் அத்தகைய வழியையும் மேற்கொண்டார்கள் என்ற அளவில்தான் அதனைக் காண்டல் வேண்டும். வன்முறையைப் பயன்படுத்தியதால் இவர் கள் அன்பு இல்லாத வன்கண்ணர்கள் போலும் என்று யாரும் தயை கூர்ந்து நினைத்துவிட வேண்டா. இதனை மனத்துட் கொண்டே மறத்திற்கும் அஃதே துணை' என்று தமிழ் மறை கூறியதை நினைவில் இருத்த வேண்டும். இவர்கள் இச்செயலில் ஈடுபடுவதற்கும் அடிப்படை அன்புதான் என்பது முன்னர் விளக்கப் பெற்றது. இக் கருத்துப் புதிதாக இங்குக் கூறப் பெற்ற ஒன்றன்று. திருக்களிற்றுப்படியார் என்ற சைவ சித்தாந்த சாத்திர நூல், மெய்கண்டாருடைய சிவஞானபோதத்துக்கும் காலத்தால் முற்பட்டதென்று அறிஞர்கள் கூறுகிறார்கள். அந்நூல் இதனை மெல்வினை என்றும் வல்வினை என்றும் பிரிவினை செய்து பேசுகிறது. இங்கு வினை என்பது செயல் என்ற பொருளில் ஆளப் பெறுகிறது. "மெல்வினையே யென்ன வியனுலகில் ஆற்றரிய வல்வினையே யென்ன வருமிரண்டும்-சொல்லிய சிவதன்மம் ஆயவற்றில் சென்றதிலே செல்வாய் பவகன்மம் நீங்கும்படி.' என்ற வெண்பாவில் இப் பிரிவினை செய்த பெரியார் இவை இரண்டுமே சிவதன்மம் தாம் ஆகலின், எதில் மனஞ் செல்கிறதோ அதிற் செல்க' என்று கூறி மேலும் இவற்றை விளக்குகிறார்.