பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பெரியபுராண ஆராய்ச்சி 4. இவன் காலத்தில் பல்லவர்க்கும் தமிழ் அரசர்க்கும் போர் நடந்ததாகத் தெரியவில்லை. அதற்குப் பதிலாகப் பாண்டிய அரசனான கோச்சடையன் இரண தீரன் இவன் மருமகனாகவும். அவன் மகனான தேர்மாறன் இராசசிம்மன் இவன் பெயரனாகவும் கருதப்படுகின்றனர். கோச்சடையன் இரணதீரன், நெடுமாறன் மகன் ஆதலின், தாய்வழியிற் சோழனுமாவன். இவன் உதவியின்றிச் சோழர் பல்லவனை எதிர்க்க வழியில்லை. எனவே, இராசசிங்கன் காலத்திற் பல்லவர்க்குத் திறைகட்டா மன்னவர் என்று சுந்தரராற் குறிக்கப்பட்ட பகைவர் வலிமையும் சிறப்பும் பெற்றவராதல் - அப்பகைவர் இன்னவர் என்பதால் வரலாற்றில் தெரியக்கூடவில்லை. இந்த ஒன்று தவிர சுந்தரர் குறித்த கழற்சிங்கன் குறிப்புகட்கும் மேற்சொன்ன இராச சிங்கன் குறிப்புகட்கும் நிறைந்த ஒற்றுமை காணப்படுகின்றது. இனி மூன்றாம் நந்திவர்மனைப் பற்றிய குறிப்புகளைக் காண்போம். இவன் வரலாற்றை அறிய, இவனைப் பற்றிய கல்வெட்டுகளும் இவன் மகனது பர்கூர்ப் பட்டயமும் இவன்மீது பாடப்பெற்ற நந்திக் கலம்பகமும் துணை புரிகின்றன. நந்திவர்மன் III (கி.பி. 840-865) 1. இவன் வட புலத்தில் வாகைசூடியவன்; தமிழரசர் மூவரையும் தெள்ளாற்றில் முறியடித்து, 'தெள்ளாறு எறிந்த நந்திவர்மன் எனப் பெயர் பெற்றவன். இவன் காலத்தில் கடல் வாணிகம் நன்கு நடைபெற்றது. சீகாழிக் கடுத்த நாங்கூரிலிருந்து சென்ற பெருமகன் ஒருவன் இப் பல்லவன் பெயரால் சையாமில் குளம் ஒன்று தொட்டான் எனின், இப்பல்லவனது புகழ் கடல் கடந்த நாடுகளிலும் பரவி இருந்ததென்னலாம். இவன் சிறந்த கடற்படையுடையவன் என்று கலம்பகம் குறிக்கிறது. இவற்றால் இவன் பேரரசன் என்பது எளிதில் விளங்கும். 2. இவன் சிறந்த போர் வீரன் என்பது மேற்சொன்ன இரு போர்களால் விளக்கமாகும். இவன், “அறைகழல் முடித்த அவனி நாரணன்” எனவும். "குரைகழல் வீர நந்தி” எனவும், பல்லவர்கோன் அரி (பல்லவருட் சிங்கன்) எனவும் கலம்பகத்திற் பாராட்டப் பெற்றவன். இத் தொடர்கள், சுந்தரர் குறித்த “கழற்சிங்கன்” என்ற பெயரை மெய்ப்பித்தல் காண்க 3. இவன் ‘சிவனை முழுதும் மறவாத சிந்தையன்” என்று கலம்பகம் குறிக்கிறது. இவன் சிறந்த சிவபக்தன் என்பதை வேலூர்ப் பாளையப் பட்டயத்தாலும் அறியலாம். 4. நந்திவர்மன் தெள்ளாற்றுப் போரில் தமிழரசர் மூவரையும் நன்கு முறியடித்தான் என்பது கலம்பகத்தாலும் கல்வெட்டுகளாலும் வெளியாகின்றது. இதனைத் தான் சுந்தரரது தில்லைப்பதிகமும் குறித்ததாதல் வேண்டும்.