பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. அறுபத்து மூவர் காலம் (கி.பி. 350 - 860) அப்பர், சம்பந்தர் காலம் சென்ற பகுதியில் சுந்தரர் காலம் ஏறத்தாழக் கி.பி. 840- 865 எனக் கொண்டோம். அவர் 63 நாயனாரையும் குறிப்பிட்டவராதலின் அவர்காலம் நாயன்மார்கால எல்லையின் கீழ்ப்பகுதி எனக்கொள்ளலாம். ஏனைய நாயன்மாருள் ஐயத்திற்கு இடமின்றி வரலாற்றுத் துணைக் கொண்டு காலம் கூறத்தக்க நிலையில் இருப்பவர் அப்பர். சம்பந்தரே ஆவர். அவர்கள் காலம் கண்டறியப்படின், அவரால் பாடப்பட்ட அவருக்கு முற்பட்டவரது கீழ்க்கால எல்லை விளங்கும். பிறகு அவரால் குறிக்கப்படாமலும் சுந்தரரால் மட்டுமே குறிக்கப்பட்டு அவர்க்கு முற்பட இருந்த நாயன்மார் காலமும் எளிதில் விளங்கும். ஆதலின், அப்பர் - சம்பந்தர் காலத்தைக் கண்டறிவோம். முதலில் சமண அரசனாக இருந்து அப்பர்க்குத் தீங்கிழைத்துப் பிறகு சைவனான பல்லவ அரசன் தன் பெயரால் குணதர ஈச்சரம் கட்டினான் என்று சேக்கிழார் கூறுகிறார். குணபரன் என்ற பெயர் கொண்ட பல்லவன் முதலாம் மகேந்திரவர்மனே ஆவன். இப்பெயர் பெரிய புராண ஏடெழுதுவோர் குறையால் குணதரன் என்று எழுதப்பெற்று விட்டது போலும் இவனைக் 'குணபரன்' என்று வல்லம், திருச்சிராப்பள்ளிக் கல்வெட்டுகள் குறிக்கின்றன. இவன் எடுத்த குணபர ஈச்சரம் திருவதிகையில் இருக்கிறது. மகேந்திரனது திருச்சிமலையில் உள்ள குகைக்கோவில் கல்வெட்டு, இவன் சைவனாகமாறியதைத் தெளிவாகக் குறிக்கின்றது காண்க : "குணபரன் என்ற அரசன் லிங்கத்தை வழிபடுபவன், விபக்திமார்க்கத்திலிருந்து (தீ நெறியினின்று குணபரனைத் திருப்பிய பேரறிவு, இந்த லிங்கத்தின் அருளால் இவ்வுலகில் நீண்டகாலம் பரவியிருக்கட்டும்." - இக்கல்வெட்டுச் சான்றுகளையும் அப்பர் வரலாற்றையும் ஆராயின், அப்பர் மகேந்திரவர்மன் காலத்தவர் என்பது தெளிவாகிறது. மகேந்திரன் காலம் கி.பி. 615 - 6.30: