பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

97

அவர்கள் பெருமானார் மக்காவிலிருந்து மதீனா புறப்பட்டுச் சென்ற நாளை அடித்தளமாகக் கொண்டு ஆண்டு முறை உருவாக்கலாம் என்றார். இந்தக் கருத்து எல்லோருக்கும் ஏற்புடையதாக இருந்தது. அண்ணலார் மக்காவிலிருந்து மதீனா நோக்கி ஹிஜ்ரத் செய்த நாளை அடிப்படையாகக் கொண்டு ஹிஜ்ரி ஆண்டு உருவாக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டது.

முஹர்ரம் முதன்மை பெற்றது

அக்காலத்தில் வழக்கிலிருந்த மாதங்களில் முஹர்ரம் ஒன்று.

ஐம்பெரும் கடமைகளில் ஐந்தாவதான ஹஜ் கடமையை துல்ஹஜ் மாதத்தில் இனிது நிறைவேற்றிய அரபிகள், அடுத்துவரும் முஹர்ரம் மாதத்தில் வணிகத் தொழிலில் முழு மூச்சுடன் ஈடுபடுவர். புதுக்கணக்கும் தொடங்கும். எனவே, ரபியுல் அவ்வல் மாதத்திற்குப் பதிலாக துல்ஹஜ் மாதத்தை அடுத்துவரும் முஹர்ரம் மாதத்தை ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதமாக, முதல் நாளாக அமைத்து உறுதிப்படுத்தப்பட்டது. இதன் மூலம் உழைப்பின் உன்னதமும் உணர்த்தப்பட்டது.

சிறப்புமிகு முஹர்ரம்
பத்தாம் நாள்

அமைதி வாழ்வுக்கு வழிகாட்டும் முஹர்ரம் இறைவன் விதித்துள்ள இறுதித் தீர்ப்பு நாளை நினைவுருத்தி அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் இறையச்ச மாதமாகவும் அமைந்துள்ளது. மனுக்குலத்தின் இறுதித் தீர்ப்பு நாள் முஹர்ரம் பத்தாம் நாளிலேயே நிகழ்வுறும் என்பது மறைதரும் இறைவாக்காகும். இவ்வகையில் மறுமை வாழ்வை நினைவூட்டி நேர் வழிப்படுத்தும் வழிகாட்டி நாளாகவும் முஹர்ரம் அமைந்துள்ளது.

7