பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- எங்கும் நிறைந்திருக்கும் பரம் எனும் பேருயிருடன், சீவன் எனும் ஆருயிரை மேலும் செழிப்புடையதாக மாற்றும் பயிற்சியே பிராணாயாமம் என்கிற அகத்தவப் பயிற்சி முறையாகும். இதைத்தான் ஈருயிரும் ஒருயிராகும் நிலை என்றார். சீவனுடன் ஒடுங்குகின்ற பரம் என்பதைக் குறித்துக் காட்டத்தான், பரம சீவன் என்று கூறியது பரமசிவனாக மாறிவந்தது. ஆக, சிவ சிவ என்பது, ஒரு விதபயபக்தியை உண்டாக்கிப் பயன்பெறச் செய்ய விழைந்த நல்ல பரிபக்குவமான பண்பாட்டுச் சொல் முறை என்று நாம் கருதலாம். விரும்பியவர்கள் சிவ சிவ கணக்கைக் கணிக்கலாம். அல்லது நீங்கள் விரும்புகிற சொற்களை அல்லது எண்களைப் போட்டு நினைத்துக் கொள்ளலாம். சர்க்கரையை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும், எந்த மொழியில் எழுதினாலும் அதன் இனிப்பு குணம் இனிப்பாகத் தான் இருக்குமேயன்றி மாறாதல்லவா? ஆகவே, இளமையை வளர்க்கும், வலிமையைச் சுரக்கும் வல்லமை உடையதாக, பிராணாயாமப் பயிற்சி உதவுகிறது. அதைப் பக்குவமாகச் செய்ய வேண்டும். பய பக்தியுடன் செய்ய வேண்டும். பெறும் பயன் பெரிது என்று நம்பிக்கையுடன் செய்ய வேண்டும். தொடர்ந்து செய்ய வேண்டும். தூய்மையான கடமை என்று தொடர்ந்து தொய்வின்றி செய்ய வேண்டும். அவசரப்படுவதும், அங்கே ஆத்திரப்படுவதும், அளவின்றி ஆவேசமாகச் செய்வதும், ஆபத்தை உண்டாக்கிவிடும். அமுதமாக இருந்தாலும் அளவோடு உண்ண வேண்டும் என்பது போல, சுவாசப் பயிற்சி சுகமாக இருந்தாலும் மிதமாகச் செய்ய வேண்டும் என்ற உணர்வுடன் செய்து பயன்பெறுங்கள். வெளிப்படையாக விளக்கிய பயன்களைப் போல, உள்ளுறையாகப் பெறுகின்ற பயன்களையும் தொடர்ந்து காண்போம்.