பக்கம்:பொன்னொளி, அண்ணாதுரை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19


அந்தக் காலத் திரையைக் கிழித்துக்கொண்டு கிளம்பிற்று, கதிரொளி—கபிலவஸ்து நகரில்.

ஆரிய மார்க்கத்தின் கோட்டையாக விளங்கிய அரண்மனைக்குள்ளிருந்தே கிளம்பிற்று, ஆரியத்தை ஒழிக்கும் அறிவொளி!

அரச வம்சத்தை ஆட்டிப் படைத்த ஆரியமார்க்கத்தை எதிர்த்திடும் ஆற்றலுள்ள ஆண்மகனொருவன், அதே அரச வம்சத்திலிருந்தே கிளம்பினான்!

ஆரிய மார்க்கத்தினர், எதிர்பார்த்திருக்கவே முடியாத இடத்திலிருந்து கிளம்பிற்று, புத்தொளி—புத்தமார்க்கம்.

பூர்வ புண்ய பலனால், அரசனாகப் பிறந்து, பிராமண ஆசீர்வாத பலனால் வாழ்ந்துவரும், எத்தனையோ ‘ராஜா’க்களிலே அவரும் ஒருவர்தான்.

அவர், மற்ற மன்னர்களைப் போலவே, ஆரியத்துக்கு, செல்வத்தையும் அன்பையும் காணிக்கையாக அளித்தவர் தான்—அறிவுப் புரட்சிக்கென அவர் ஓர் ஒப்பற்ற காணிக்கையை—சித்தார்த்தரைத்தருவார் என்று ஆரியம், எண்ணியிருந்திருக்க முடியாது ஆரிய ஆசிர்வாத பலனாலேயே, தமக்கோர் ஆண்மகவு பிறந்தது என்று தான், மன்னர் எண்ணிக் களித்திருப்பார். அவர்என்னகண்டார், தங்கத் தொட்டிலில் புன்னகை தவழும் முகத்துடன் உள்ள அக்குழந்தை மக்களின் எண்ணத்துறையிலே, பெரியதோர் புயலைக்கிளப்பப் போகிறது என்பதை.

இளவரசர் பிறந்திருக்கிறார்!—என்று தான் மக்கள் எண்ணிப் பூரித்தனர்—புதுமார்க்கப் போதகர் பிறந்தார், என்று எங்கனம் அறிவர்.