பக்கம்:பொன்னொளி, அண்ணாதுரை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18



வேதமோதி வேள்வி நடாத்துவதன்மூலம், இகத்திலே இடுக்கண்களைக் களைந்துகொள்ள முடிவதில்லையே, வாழ்க்கையிலே ஏற்படும் கஷ்டங்களும், பஞ்சம், பிணி, போர், கலகம் முதலிய பெரும் நாசப் புயல்கள் வீசாமல் தடுக்க முடிவதில்லையே, இந்நிலையிலே, வைதிக மார்க்கம், என்ன சாதித்துவிட்டது, என்று எவரும் கேட்கத் துணியவில்லை.

சாந்தி இல்லை—சமர்கள் ஏராளம்! ராஜகோலாகலத்துக்குக் குறைவில்லை இராப்பட்டினிகளுக்கும் குறைவில்லை! கண்டாரைக் கொல்லும் கட்டழகியருக்கும், காதல் வாழ்க்கை நடத்தும் சீமான்களுக்கும் குறைவில்லை—கண்டு கொண்டிருக்கும் போதே, ஊன் உருகி, எலும்புக்கூடாகி. மடியும், பஞ்சைகளுக்கும் குறைவில்லை!

இன்பத்துக்கு அருகே துன்பம்! செல்வத்துக்கு அருகே வறுமை! அரண்மனைக்கருகே அன்னக்காவடிகள்! சாந்தோபதேச மண்டபத்துக்கருகே பாசறைகள், மாயப் பிரஞ்ச உபதேசியாருக்கும் பக்கத்திலே, மண்டலம் பல ஜெயித்து, மணிமுடியின் ஜொலிப்பை அதிகப்படுத்திடும், கூர்வாள் ஏந்திய படைத்தலைவர்! இப்படி இருந்தது—இவ்வண்ணமிருப்பது சரியா என்ற கேள்வியும் எழாமலிருந்தது.

மழை இல்லையா, வருண பூஜை செய்வோம்–மாற்றானை வெல்லவேண்டுமா, மற்றோர் யாகம் செய்வோம்—ஆடுகள், பசுக்கள் (முக்கியமான நேரத்திலே நாபலியும்கூட) அறுத்துப் போட்டு, வேள்வி நடாத்துவோம்—விசேஷ பலன் கிடைக்கும் என்று குருமார்கள் கூறக் கேட்டு, கோல்கொண்டோன் அதுபோலவே செய்திடும் காலம்.