பக்கம்:பொன்னொளி, அண்ணாதுரை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17


விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் பிரம்மாண்டமான கோயில்கள் கட்டப்பட்டு வேந்தர்களின் காணிக்கைகள் குவிக்கப்பட்டு, வேதமோதிகளின், ஆதிக்கத்தின் கீழ்விடப்பட்டிருந்த காலம்.

ஆலய அதிபர்களாக ஆரியக் குருமார்கள் வீற்றிருந்த காலம்.

அவர்களின் தாய்மொழியான, சமஸ்கிருதம், ‘தேவ பாஷை’ என்பதை, அனைவரும் ஏற்றுக்கொண்டிருந்த நாட்கள்.

ஜெபமாலை, செங்கோலை ஆட்டிப்படைத்த காலம்.

பூஜாரியின் கண் செல்லும் வழி செல்ல பூபதிகள் காத்துக்கிடந்த காலம்.

வங்கம், கலிங்கம், துளுவம், பாஞ்சாலம், நேபாளம், கூர்ஜரம், மகதம், அங்கம்,எனும் எந்த அரசிலும், வைதீக பிராமண மார்க்கமே, ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த காலம்.

வேதமார்க்கம், வேள்வி முறை, ஜாதி,அமைப்பு, குல தர்மம், மந்திர உச்சாடன பலம், எனும் இம் முறைகளுக்கு, மேலானவைகளாகவோ, இவைகளைப் போன்றவைகளாகவோ வேறு ஏதேனும் இருக்கிறதா, என்ற கேள்வியே பிறக்காத காலம்.

வேத மார்க்கத்தின் பயனாக, ஜாதி முறையும், ஜாதி முறையின் பயனாக, பிராமண ஆதிக்கமும் ஏற்பட்டிருக்கிறதே, இது சரியா, பயன் தருவதுதானா என்பது பற்றி, எண்ணமும் எழாமலிருந்தது.