பக்கம்:பொன்னொளி, அண்ணாதுரை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

தார்த்தர்—இதுவரையாரும் கேட்காதகேள்வி இது என்றார் புத்தர்—பதில் கிடைத்தாக வேண்டுமே, பதில் கிடைக்காவிட்டால் மனக் கொந்தளிப்பு அடங்காதே என்று கூறினார் சித்தார்த்தர். பதில் தெரியவேண்டுமா—தேடு,கிடைக்கும் என்றார் புத்தர். தேடத்தொடங்கினார்—அரண்மனை, அழகு மனைவி, அன்புக்கனி, எதுவும் அவரைத் தடுக்கமுடியவில்லை —தேடினார், தேடினார்—காடுகளில் கானாறுகளில், கடும் தவத்தில், குருமார்களிடத்தில், தேடாத இடமில்லை—நாடாதமுறைகிடையாது. சித்தார்த்தருக்கு விடைகிடைக்கவில்லை, விசாரம் மேலிட்டது—கிடைக்குமிடத்தை விட்டு வேறு எங்கெங்கோ தேடி அலைகிறாயே!—என்று கேலிபேசினார், உள்ளே இருந்தவர்—எங்கே இருக்கிறது, என்றுகேட்டார் சித்தார்த்தர்—உன்னிடமே இருக்கிறது, உள்ளத்திலேயே இருக்கிறது என்றார் உள்ளுறைபவர்—புன்னகை பேரறிவு கிடைத்தது.

சித்தார்த்தர்—புத்தரானார். சிறுமதியாளரின் செருக்கும் பகையும் அவரைத் தொடவும் சக்தியற்றுப் போயின. அவருடைய அறிவுரை கேட்க, ஆயிரமாயிரம் மக்கள் கூடுகின்றனர்! அவர் நடமாடும்காடுகள், நாடுகளாகின்றன! அவர் தங்கும் இடம், புனிதம் பெறுகிறது! அவர் மொழி, புது வழியைக் காட்டுகிறது.

மன்னராகி மணி முடி தரித்து, படைபலத்துடன், சித்தார்த்தர், வேறு அரசுகளுக்குள் சென்றிருந்தால், அவரை வாளும் வேலும், கரியும் பரியும், ஆளும் அம்பும், சதியும் பிறவும், எதிர்த்துத் தாக்கியிருக்கும்—வென்றால், தோற்ற மன்னர்கள், பொறாமையால் அவரைத் தூற்றியிருப்பர்—தோற்றுப்போயிருந்தால், வெற்றிபெற்றவேந்தன், அவரை விரட்டி விரட்டி அடித்திருப்பான்.