பக்கம்:பொன்னொளி, அண்ணாதுரை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22


இதோ வருகிறார் புத்தர்—அரசர்கள், எதிர்கொண்டழைக்கிறார்கள். அவர் பார்க்கிறார், மன்னர்கள், தங்களைப் பாக்கியசாலிகளென்று கருதிப்பூரிக்கிறார்கள். அரசுகள் பல அவர் இட்ட கட்டளையை நிறைவேற்ற முன் வருகின்றனர். அரசர் பலர், அவருக்கு ஏவலராகின்றனர். புதியதோர் சாம்ராஜ்யம்,போரும்பகையும் இன்றி, அன்பும் அறமும்கொண்டு ஆக்கப்பட்டு விட்டது.

வேத நிந்தகன்—என்றுவெறுப்புடன், ஆனால், மெதுவாகத்தான், கூறுகிறார்கள், வைதீகமார்க்கக் குருமார்கள்.

வாதத்திற்கு இழுத்து, வம்பு வல்லடியில் ஈடுபட வைப்போம், என்று எண்ணி, பிரபஞ்சத்தின் ஆதி அந்தம் கூறவல்லாயோ, மரணத்துக்குப்பின் ஜீவன் உள்ள நிலையை அறிந்துரைக்க வல்லாயோ? ஆதிமத்யாந்தரகிதனின் அந்த சங்கத்தை அறிந்திடும் ஆற்றல் பெற்றாயோ?—என்று ஆர்ப்பரிக்கின்றனர், ஆரிய குருமார் சிலர். அவர் புன்னகை புரிகிறார் என் கடன், இவ்வுலகிலே உள்ள மக்கள் தூயவர்களாக வாழ்வதற்கு என்ன வழி என்பதுபற்றிய எண்ணத்தை வெளியிடுவதுதான்—என்று கூறுகிறார். சுழலில் சிக்க மறுக்கிறாரே, என்று சூதுமதியினர் ஆயாசமடைகின்றனர்; அவரோ, அரசுபல வென்று, முரசு கொட்டிய படி செல்கிறார்.

வேதத்தை—வேள்வியை—ஜாதியை—பேதத்தை—அவர் அறவே கண்டித்து வருகிறார்.

நாட்டிடை உலவி, காய்ந்த புல்லினைக் காட்டி, தீ மூட்டி, ஆண்டவனின் படைப்புகளைக் கொன்று, அதிலே கொட்டி, மந்திரம் ஜெபித்து, அதன்மூலம், மக்களை ஈடேற்-