பக்கம்:பொன்னொளி, அண்ணாதுரை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

றும் வேள்வி முறையை, அவர் மடைமை, கொடுமை, என்று கண்டிக்கிறார். ஆரியம் திணறுகிறது.

நிரீஸ்வரவாதி!—என்று நிந்திக்கிறார்கள்—அவரை—ஆனால் உரத்த குரலில் அல்ல! புத்தர்பக்கம் நாட்டவர் திரண்டெழுந்து நிற்கின்றனர்.

மன்னர்களுக்குப் புதியதோர் சிக்கல் ஏற்பட்டுவிட்டது. மக்கள் புதியதோர் மகானிடம் சொக்கிக் கிடக்கிறார்கள், அவரோ புதியதோர் மார்க்கத்தைக் காட்டுகிறார்; அந்தப் புதிய மார்க்கமோ, பூசுரத் தலைவர்கள் கூறிவரும் கொள்கைகளை மறுப்பதாக இருக்கிறது; அந்தப் பூசுரத் தலைவர்களோ, தங்களுக்குப் பரம்பரைக்குருமார்கள்; அவர்களின் ஆசீர்வாத பலம் இல்லாத அரசு ஆண்டவனால் அழிக்கப்பட்டுவிடும் என்று அச்சம் வேறு இருக்கிறது; இந்நிலையில், என்னசெய்வதென்று தெரியாமல் திகைத்தனர், மன்னர்கள்.

புத்த மார்க்கத்தை அலட்சியப்படுத்திடவோ முடியவில்லை. மக்கள், அதன் வயப்பட்ட வண்ணமிருக்கிறார்கள். பழைய வைதீக பிராமண மார்க்கத்தையோ அடியோடு வெறுத்துத் தள்ளிவிடுவதற்கில்லை. பல இடங்களிலே அரச மதமாக இருக்கிறது ஆரியம். இந்தச் சிக்கல், மன்னர்களுக்கு.

மக்களின் மனதை மயக்கி, அதன்மூலம், மன்னர்களை மருளச்செய்து மண்டலம் பலவற்றிலும் வெற்றிகொள்ளும் புத்த மார்க்கத்தை எதிர்த்தொழிக்கும் ஆற்றல் இல்லை, ஆரியமதத் தலைவர்களுக்கு. அலட்சியப்படுத்திப் பார்த்தனர்—பலனில்லை. அவன் ஒர் மாயாவி; மக்களை வசியப் படுத்துகிறான், என்று பேசிப் பார்த்தனர்; பலன் இல்லை!