பக்கம்:பொன்னொளி, அண்ணாதுரை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5


புனித விழாவிலே கூடியிருந்தோருக்கு, புத்தபிரானிடம் பற்றுக் கிடையாது என்றோ, புத்த மார்க்கத்திடம் மதிப்புக் கிடையாது என்றோ கூறவில்லை. பாராட்டினர்! கொண்டாடினர்! வணங்கினர்! ஆம்! விழா, நடைபெற்றது. ஆனால், புத்த மார்க்கத்தின பொலிவு நாட்டுக்குத் தேவை என்று உள்ளூர உணர்ந்தனரா—அந்தப் பொலிவின் பயனைப் பெற, முயற்சி எடுத்துக்கொள்வதாக, வாக்களித்தனரா? இல்லை!

சோமநாதர் கோயிலைப் புதுப்பிக்கும் வேளையில், சோமநாதருடைய பெருமை சொல்லொணாது என்று பேசுவதுபோல, கும்பமேளாவில் கலந்துகொள்ளும்போது, பாபத்தைப் போக்கிக்கொள்ள இதுவே சிறந்த வழி என்று கூறுவதுபோல, விநாயகசதுர்த்தியன்று ஆனைமுகத்தானே அவனியைக் காப்பான் என்று அகவல் பாடுவதுபோல, துர்க்கை பூஜையின்போது, ‘மாதாவி’ன் பெருமையை நெஞ்சு நெக்குருகப் பாடுவதுபோல, சாஞ்சியில் நடை பெற்ற விழா, புத்த மார்க்கத்தைச் சார்ந்ததாகையால், புத்த மார்க்கமே புனித மார்க்கம் என்ற புகழுரையைச் சொரிந்தனரே யன்றி, உண்மையாகவே, புத்த மார்க்கம் தந்த புதிய, அருமையான கருத்துக்களை, பொலிவுள்ள கருத்துக்களை மீண்டும் பரப்பவேண்டும் என்ற முயற்சி எடுத்துக்கொள்ளப்பட்டதா? டாக்டர், பதில் கூற மறுப்பார்! எந்தெந்த இடத்தில், எதைஎதைக் கூறுவது, பொருத்தமாகுமோ அதன் படி பேசினேன் என்றுதான் கூறுவார்—அதுவும் நெருங்கிய நண்பர்களிடம்! புத்த மார்க்கத்தினால்,நாடு ஒரு காலத்தில் பெற்றிருந்த நிலை யாது? மக்களிடம் விளக்க முன் வருவாரா? வர, நேரமிராது! வேறு எவரேனும், அந்த விளக்கத்தைக் கூறிடும்போதாவது, புன்னகையைப் பரிசாக