பக்கம்:பொன்னொளி, அண்ணாதுரை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

அளிப்பாரோ? பரிசுகூடத் தேவையில்லை. எதிர்ப்புச் செய்யாமலாவது இருப்பரோ? இல்லை, இல்லை. நிச்சயமாக எதிர்ப்புக் காட்டத் தவறார்! விழாக்களிலேயோ, புகழ்வர் போற்றுவர், பூரிப்பர், பூரிப்படையச் செய்வர். டாக்டர் ராதாகிருஷ்ணன் மட்டுமல்ல, வேறு பலரும்—பொதுவாகவே, “மேதைகள்!!” ஏன்? ஏனா? என்ன நஷ்டம் அதனாலே அவர்களுக்கு! புத்தமார்க்க விழாவிலே இரண்டே ‘உபசார மொழி’ புகல்வது என்ன சிரமம்; புகன்றுவிட்டால், நஷ்டம் என்ன ஏற்படப்போகிறது! புத்த மார்க்கத்தைப் புகழ்ந்து பேசியதுடன் அந்த மார்க்க மாண்புகளை நாடு பெறப் பாடுபடுவது தொடர்ந்து செய்யப்படவேண்டும் என்றால், கஷ்டம், நஷ்டம்! புகழுரை தந்தவர்கள் அது போன்ற நோக்கம் கொண்டவர்களா! இருந்தால், நாடு முன்னேறிவிட்டது, மக்கள் புதுவாழ்வு பெற்றுவிடப் போகிறார்கள், என்று கூவிக் கூத்தாடலாமே, களிப்புடன் அஃதல்ல, அவர்கள் நோக்கம்! நடைபெறுவது விழா, நாலு நல்ல வார்த்தைகள் சொல்லி வைப்போம், நஷ்டமென்ன அதனாலே, என்பது அவர்கள் நோக்கம்.

புத்த மார்க்கம், ஒரு புதிய பாதையை வகுத்துத் தந்தது.

புத்த மார்க்கம், பழைய பாதை வழி சென்றால், மானிட வர்க்கம், பெற வேண்டிய பெரு நிலையைப் பெற முடியாது, என்று எடுத்துரைத்தது.

புத்த மார்க்கம், புரோகித மார்க்கம், புரட்டர்களிடம் வெள்ளை உள்ளத்தாரைச் சிக்கிடச் செய்யும் சூதுத்திட்டம் என்று எச்சரிக்கை செய்தது.