பக்கம்:பொன் விலங்கு.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பார்த்தசாரதி

103

உங்களிடம் எதைச் சொல்ல வேண்டுமோ அதைச் சொல்லுவதற்குச் சரியான வார்த்தைகள் அந்தப் பாடலிலிருந்துதான் எனக்குக் கிடைக்கின்றன. செம்மண் நிலத்தில் மழை பெய்தாற்போல்தான் நானும் இப்போது உங்கள் ஞாபகத்தில் இணைந்து உங்களைச் சார்ந்ததன் வண்ணமாக இருக்கிறேன். உங்கள் செந்தாமரைப் பாதங்களைத்தான் நான் முதல் முதலாக என் கண்களால் பார்த்தேன். அந்த பாதங்களைப் பார்த்தபின் முகத்தைப் பார்க்கும் துணிவு எனக்கு வரவில்லை என்பதா, அல்லது அந்தப் பாதங்களிலேயே மேலே எதையும் பார்த்துத் தவிக்கும் அதிக நோக்கமில்லாமல் என் உணர்வுகள் யாவும் ஐக்கியமாகவிட்டன என்பதா...எப்படிச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் என் நிலையில் இருந்தால் இதை இன்னும் அழகாகச் சொல்லுவீர்கள் எனக்கும் சொல்லிக் கொடுப்பீர்கள். வேடிக்கையாகவோ, பிரமையாகவோ உங்கள் பாதங்களைப் பார்த்தவுடன் எனக்கு ஒரு கற்பனை தோன்றியது. அற்புதக் காட்சியாக என் கண்களுக்கு மட்டுமே தோன்றிய அந்தக் கற்பனைபைத்தியக்காரத்தனமாகவும் இருக்கலாம். ஆனாலும் பொய்யோ புனைவோ வெறும் பிரமையோ எதுவாயிருந்தாலும் என் மனத்தில் தோன்றிய அழகை நான் சொல்வதற்கு எனக்கு உரிமை உண்டு. உங்கள் கால்கள் மிதித்துக் கொண்டு போகிற இடமெல்லாம் அப்படி நடந்து முடித்து மறுகணமே ரோஜாப்பூப் பூத்துக் கொட்டுவதுபோல் பிரமையாயிருந்தது. இன்று மாலை தோட்டத்தில் போய் நின்று ரோஜாப்பூக்களைப் பார்த்தபோதும் இதையே நினைத்தேன். இந்தக் கடிதத்தை நான் உங்களுக்கு எழுத நினைத்ததற்குக் காரணம் வேறு. பெண்களால் சுற்றி வளைக்காமல் நேரடியாக எதையும் சொல்லிவிட முடியாது. எதையோ அவசர மாகவும் அவசியமாகவும் உங்களுக்குச்சொல்லிவிடநினைத்து வேறு எதை எதையோ வீணுக்கு வளர்த்து எழுதிக்கொண்டு போகிறேன். அதற்காகவும் என்னை மன்னித்துவிடுங்கள்.

"இண்டர்வ்யூ" முடிந்ததும் சாப்பிட்டு நீங்கள் விடைபெற்றுப் புறப்படுகிற நேரத்துக்கு மழை வந்து என்னை பாக்கியசாலியாக்கியது. மழை வந்திராவிட்டால் உங்களைக் கல்லூரிக்கும் பஸ் நிலையத்துக்கும் கொண்டுபோய் விடுகிற வாய்ப்பு எனக்கு கிட்டியிருக்காது. மழை வந்திராவிட்டால் 'செம்புலப் பெயர் நீர்போல' என்ற உங்கள் உவமையை உங்களுக்கு முன்னாலேயே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/105&oldid=1356027" இலிருந்து மீள்விக்கப்பட்டது