பக்கம்:பொன் விலங்கு.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

பொன் விலங்கு

பிரத்யட்சமாக நான் புரிந்து கொண்டிருக்க முடியாது. உங்களைப் பஸ்ஸில் ஏற்றி அனுப்பிவிட்டு வீட்டுக்குத் திரும்பியதும் நான் திகைப்பு அடையும்படியான காட்சி ஒன்றை இங்கே கண்டேன். அதனால்தான் இந்தக் கடிதத்தை நான் உங்களுக்கு எழுத நேரிட்டது. நீங்கள் விண்ணப்பம் அனுப்பியிருந்த அதே தமிழ் விரிவுரையாளர் பதவிக்கு இரண்டாவதாக விண்ணப்பம் செய்திருந்த முதியவர் ஒருவரையும் வரவழைத்துப் பேசிக் கொண்டிருந்தார் அப்பா. இதைப் பார்த்ததும் அப்பாவின்மேல் கோபம்கோபமாக வந்தது எனக்கு. நீங்கள் பேசிய சில வார்த்தைகளால் அப்பாவுக்கு உங்கள் மேல் கோபல் இருந்தாலும் உங்கள் தகுதிகளையும் திறமையையும் ஆர்வத்தையும் அவர் நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறார். ஆனால், எங்கள் கல்லூரி முதல்வருக்கு என்ன காரணத்தாலோ உங்கள் மேல் ஒரு விதமான வெறுப்புப் பதிந்து போயிருக்கிறது. இந்த வேலைக்கு உங்களை நியமிக்கக் கூடாதென்பதை அவர் அப்பாவிடம் பிடிவாதமாக வற்புறுத்திக் கொண்டிருக்கிறார். இரண்டாவதாக மனுச்செய்துவிட்டு வந்திருக்கும் முதியவருக்கு முன் அநுபவமும் வயதும் இருப்பதனால் அவரையே தமிழ் விரிவுரையாளராக நியமித்து விடலாமென்று முதல்வரின் அபிப்பிராயமாக இருக்கிறது. அந்தரங்கமாக அப்பாவுக்கு அந்த முதியவரைப் பிடிக்கவில்லை. மல்லிகைப் பந்தல் கல்லூரியின் இலட்சியங்களைப் புரிந்து கொள்ளாமல் 'சம்பளம் அதிகம்' என்ற ஒரே காரணத்துக்காக மட்டும் ஏற்கெனவே தாம் வேலை பார்த்துக் கொண்டிருக்கிற கல்லூரியை விட்டு விட்டு அவர் மல்லிகைப் பந்தலுக்கு வருகிறாரோ என்று அப்பா சந்தேகப்பட்டுத் தயங்குகிறார். இந்த நிலையில் நீங்கள் ஒரு காரியம் செய்ய வேண்டும். இந்தக் கணமே அப்பாவுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும். அதில் உங்கள் இலட்சிய ஆர்வங்களைப் பற்றியும் அப்பாவின் கல்விப் பணியைப் பற்றியும் குறிப்பிடுங்கள். இப்படி உங்களை வற்புறுத்துவதற்கோ, துண்டுவதற்கோ எனக்கு உரிமை இல்லை. ஆனால் உங்களுடைய பட்டுப் பாதங்கள் மறுபடியும் மல்லிகைப் பந்தலில் செம்மண் நிலத்தில் நடக்கவில்லையானால் எனக்குப் பைத்தியம் பிடித்தாற் போல் ஆகிவிடும். இப்போதே பைத்தியக்காரியாக மாறித்தான் இந்தக் கடிதத்தை எழுதத் துணிந்திருக்கிறேன். என்னால் உங்களை மறக்க முடியாது. கேட்பவர் மனத்தை வசீகரிக்கும் உங்கள் உரையாடல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/106&oldid=1356063" இலிருந்து மீள்விக்கப்பட்டது