பக்கம்:பொன் விலங்கு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பார்த்தசாரதி

105

தொழுவதற்கு ஆசைப்பட்டு ஏங்கச் செய்யும் உங்கள் பாதங்கள், இவையெல்லாம் என் ஞாபகத்தில் பதிந்து கொண்டிருக்கின்றன. நீங்கள் மறுபடி மல்லிகைப் பந்தலுக்கு வந்து கல்லூரியில் வேலை பார்த்துக்கொண்டு இங்கேயே தங்கிவிடவேண்டும். என்னுடைய நினைவுகளால் இதற்காகத் தவம் செய்து கொண்டிருக்கிறேன் நான். நீங்கள் வருவது எங்கள் கல்லூரியின் அதிர்ஷ்டம், கல்லூரி முதல்வர்கூட உங்களுடைய தோற்றத்தினாலும் பேச்சுத் திறத்தினாலும் நீங்கள் மாணவர்களை அதிகம் கவர்ந்து விடுவீர்களோ என்று நினைத்துத்தான் பயப்படுகிறார். பிறருடைய சாமர்த்தியங்களை நினைத்து அவர்களை அருகில் நெருங்க விடாமல் பயந்து ஒதுங்குகிறவர்களில் மல்லிகைப் பந்தல் கல்லூரி முதல்வரும் ஒருவர். இதையெல்லாம் எண்ணி நீங்கள் அச்சமோ, தயக்கமோ அடைய வேண்டியதில்லை. எனக்காகத் தயவு செய்து அப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதுங்கள். முக்கால்வாசி உங்களைப் பற்றி அவருக்கே நல்ல எண்ணம் இருக்கிறது. உங்கள் கடிதம் கிடைத்தால் அவர் முடிவு உங்களுக்குச் சாதகமாக மாறும். பரபரப்போடு எழுதிய இந்தக் கடிதத்தை யாருக்கும் தெரியாமல் நானே இரகசியமாக எடுத்துக்கொண்டு சென்று தபால் பெட்டியில் போடப் போகிறேன். நான் இப்படி ஒரு கடிதம் உங்களுக்கு எழுதியது தவறானால் என்னை மன்னிக்கவும் நீங்கள் தயாராக இருக்கவேண்டும். என்னால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. உங்களைத் தவிர வேறொருவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்படலாம் என்று எண்ணத்தைக்கூட என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. மல்லிகைப் பந்தல் ஊரையும் கல்லூரியையும் உங்களுக்கு மிகவும் பிடித்திருப்பதாகக் கல்லூரியைச் சுற்றிப் பார்க்கும் போது நீங்கள் என்னிடம் கூறினீர்கள். அவ்வாறு உங்கள் மனததைத் கவர்ந்த ஓர் ஊருக்கு வருவதை நீங்கள் விரும்பத்தானே செய்வீர்கள்? ஆகவே அவசியம் நீங்கள் இங்கேதான் விரிவுரையாளராக வரவேண்டும். என்னை ஏமாற்றி விடாதீர்கள் சார்!... உங்களை அவசியம் இங்கே எதிர்பார்க்கிறேன்." உங்கள், 'பாரதி.

-என்று கடிதம் முடிந்திருந்தது. 'என்னை ஏமாற்றிவிடாதீர்கள் சார்' என்ற வாக்கியம் ஒன்று மட்டும் அந்தப் பெண் அப்படியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/107&oldid=1356081" இலிருந்து மீள்விக்கப்பட்டது