பக்கம்:பொன் விலங்கு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

பொன் விலங்கு

எதிரே வந்து நின்றுகொண்டு அழகிய விழிகள் இரண்டையும் சுழற்றி வாய் திறந்து நேருக்கு நேர் பேசுவது போலவே இருந்தது. கம்மென்று நான்கு தாள்களிலும் குடை மல்லிகை மணம் கமழ்ந்தது. மெல்லிய ரோஸ் நிறக் கடிதத்தாள்களை மடித்து மீண்டும் உறையிலிட்டான் சத்தியமூர்த்தி, எதிரே நின்றுகொண்டிருந்த அப்பா நம்பிக்கையோடு அவனைக் கேட்டார். "யார் எழுதியிருக்கிறார்கள் இதை? பிரின்ஸிபலா? கல்லூரி நிர்வாகியா? கடிதத்துக்குள்ளே பூக்கள் வேறு வைத்திருக்கிறார்களே...?" ஒரு கணம் சத்தியமூர்த்தி ஒன்றும் சொல்லத் தோன்றாது தன் தந்தையின் முகத்தை நிமிர்ந்து பார்க்கக் கூச்சப்பட்டுத் தயங்கி நின்றான்.

8

ஒரு பெண்ணுக்குத் தான் அழகாயிருக்க வேண்டுமென்ற ஞாபகமே தன் இதயம் அழகனாக ஒப்புக் கொண்டு அங்கீகரிக்கிற ஒருவனுக்கு முன்புதான் நிச்சயமாகவும் தவிர்க்க முடியாமலும் ஏற்படுகிறது.

மல்லிகைப் பந்தலின் அழகும் அமைதியும் இணைந்த வாழ்ககையில் ஒரு நாள் ஒரு பரிபூரணமான முழுநாள் ஓடி மறைந்துவிட்டது. குளிர்ச்சி நிறைந்த அந்த மலைநாட்டு நகரத்தில் ஒவ்வொரு நாளும் பொழுது புலர்வதே ஒரு சுவையான அநுபவம். பாலாவி போல் பனி மூடிய மலைத் தொடர்களிடையே ஒவ்வொரு நாள் காலை நேரமும் விடிவதற்குச் சோம்பல்பட்டுக் கொண்டே மெல்ல விடிவது போலிருக்கும். காற்றில்; ஆடி அலைக்கழிக்கப்பட்டு மெல்ல உதிரும் பூவைப்போல அப்படி மந்தமாக விடிவதிலும் ஓர் அழகு இருக்கும். படுக்கையில் எழுந்து உட்கார்ந்து பறப்பதற்குச் சிலிர்த்துக் கொள்ளும் கருவண்டுகளாய்க் கண்களைத் திறந்து பார்த்தாள் பாரதி. பச்சை மரகதப் பரப்பாக வளர்ந்து கிடந்த தோட்டத்துப் புல்வெளியில் வைரம் சிதறினாற்போல் பனித்துளிகள் மின்னின. ஓரிரு கணங்கள்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/108&oldid=1356103" இலிருந்து மீள்விக்கப்பட்டது