பக்கம்:பொன் விலங்கு.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 பொன் விலங்கு

"நிச்சயமாக அப்படி இல்லை? மோகினி சேற்றில் பூத்த செந்தாமரை. குப்பையில் விளைந்த குருக்கத்தி. காசு பணத்துக்கு ஆசைப்படும் அவளுடைய தாயின் அருகே அவள் கண்ணியமான வாழ்வுக்கு மட்டுமே ஆசைப்படும் பரிசுத்தமான இதயத்தோடு நிற்கிறாள். அவள் எந்த வீட்டில் எப்படிப்பட்டசூழ்நிலையில் பிறந்து வளர்ந்திருந்தாலும் வாழ்ந்திருந்தாலும் இன்று அவளுடைய எண்ணத்திலும், செயலிலும், சொல்லிலும் தூய்மை இருக்கிறது. நினைப்பையும், செயலையும், சொல்லையும் சத்தியமாக அளவிட்டுக் கணித்து அந்தக் கணிப்பினால் மட்டுமே மனிதர்களின் சாதியைப் பிரிப்பதாக இருந்தால் - தூய்மை உள்ளவர்கள், தூய்மை அற்றவர்கள் என்று இரண்டு சாதிகள்தான் பிரியும். அப்படிக் கணிக்கிற கணிப்பில் மோகினியின் சாதி நிச்சயம் உயர்ந்ததாகத்தான் இருக்க முடியும்; மனிதனுடைய முன்னிலையில் வேண்டுமானால் செல்வத்தையும், செல்வமின்மையையும் வைத்து வளமும், வறுமையும் தீர்மானிக்கப்படலாம். ஆனால் கடவுளுடைய சந்நிதியில் வறுமையும், வளமையும் வேறு விதமாகத் தீர்மானிக்கப்படுகின்றன. மனம், மொழி, மெய்களால் மனிதர்கள் எவ்வளவுக்குச் சத்தியமாக வாழ்ந்தார்கள், அல்லது வாழவில்லை என்பதை வைத்துத்தான் கடவுளுடைய சந்நிதானத்தில் செல்வமும், ஏழைமையும் நிறுத்துத் தீர்மானிக்கப்படுகின்றன. பணத்தைச் சம்பாதித்துப் பெரிய மனிதனாக முயலும் கண்ணாயிரமும், பணத்தைத் தாராளமாகச் செலவழித்து அதன் மூலமாகப் பெரிய மனிதனாக முயல்கிற மஞ்சள்பட்டியாரும் கடவுளின் சந்நிதியில் நிச்சயம் ஏழைகளாகத்தான் நின்று கொண்டிருப்பார்கள். இவர்கள் ஏழைகளாக நிற்கிற அதே இடத்தில் மோகினியைப் போன்ற அபலைகள் செல்வச் செழிப்போடு நின்று கொண்டிருப்பார்கள் என்று மோகினியை ஆதரித்துப் பலமாக எதிர்வாதம் செய்தது அவனது மற்றோர் எண்ணம். இந்தச் சமயத்தில் கோவில் பிராகாரத்தில் தன்னிடம் அவள் கூறியிருந்த அந்த அழகிய வாக்கியத்தை மீண்டும் நினைவு கூர்ந்தான் சத்தியமூர்த்தி.

'ஆதரவற்றதெல்லாம் ஏழைதான். அந்த விதத்தில் உண்மையும் ஏழையாயிருப்பதில் தவறில்லை."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/190&oldid=595191" இலிருந்து மீள்விக்கப்பட்டது