பக்கம்:பொன் விலங்கு.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - 187

விடைபெற்றுக் கொள்வதற்கு நேரம் இல்லை. இன்றிலிருந்து அங்கங்கே நண்பர்களைச் சந்திக்க நேரும்போது அவர்களிடம் சொல்லிக் கொண்டு விட வேண்டியதுதான் என்று பயணத்துக்கு முன் செய்ய வேண்டிய காரியங்கள் ஒவ்வொன்றாக அவனுக்கு நினைவு வந்தன. கொண்டு செல்ல வேண்டிய புத்தகங்களைப் பிரித்து வைத்து முடித்தபோது மாலை ஐந்து மணிக்கு மேலாகிவிட்டது. முகம் கழுவி உடைமாற்றிக் கொண்டு அவன் வெளியே புறப்பட்டான். தெருத் திருப்பத்தில் மாடியில் ஒண்டுக்குடித்தனம் இருக்கிற நிருபர் பரமசிவம் எதிர்ப்பட்டு வேலை கிடைத்ததைப் பற்றி விசாரித்து தம் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார். குமரப்பனுடைய அறைக்குப் போவதற்காக வடக்கு மாசி வீதியிலிருந்து கிருஷ்ணன் கோயில் சந்தைக் கடந்து வந்து கொண்டிருந்தபோது மோகினியின் வீடு உள்ள தெரு அங்கிருந்து மிகவும் பக்கத்தில் இருப்பது அவனுக்கு ஞாபகம் வந்தது. தான் மல்லிகைப் பந்தலுக்குப் புறப்பட்டுப் போவதைப் பற்றி மோகினியிடம் சொல்லிக் கொள்வதா வேண்டாமா என்று அவன் மனத்தில் ஒரு கேள்வி எழுந்தது. இந்தக் கேள்வியின் தொடர்பாக இதையடுத்து அவன் மனத்தில் மோகினியைப் பற்றி ஒரு வாதப் பிரதிவாதமும் எழுந்தது.

'ஊருக்குப் புறப்படுவதற்கு முன்பு வீடு தேடிக் கொண்டு போய்ச் சொல்லிக் கொள்வதற்கும், விடைபெறுவதற்கும் மோகினி யார்? நான் என் வேலை நிமித்தமாக மல்லிகைப் பந்தலுக்குப் போவதைப் பற்றி அவளிடம் எதற்காகச் சொல்ல வேண்டும். ஏதோ ஒரு விதத்தில் எங்கோ இரயில் பயணத்தின்போது சந்திக்க நேர்ந்தவர்களை நான் எதற்க்ாக என் வாழ்க்கையில் இவ்வளவு அவசியம் நிறைந்தவர் களாகக் கருதவேண்டும்? அவளுடைய போதாத காலம் அவள் இரயிலிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொள்ள முயன்றாள். அதே இரயிலில் நானும் பயணம் செய்ய நேர்ந்ததனால் நல்ல சமயத்தில் அவளுடைய மனவேதனையை மாற்றி அவளைக் காப்பாற்ற முடிந்தது. அதற்காக அவள் என்னை மதிக்கிறாள், வணங்குகிறாள் என்பதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், நான் என்னுடைய ஞாபகத்தில் அவளுக்கு எவ்வளவு இடம் அளிக்க முடியும்? எதற்காக அளிக்க முடியும்' என்று கடுமையாகக் கருதித் தடுத்தது ஒர் எண்ணம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/189&oldid=595187" இலிருந்து மீள்விக்கப்பட்டது