பக்கம்:பொன் விலங்கு.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 பொன் விலங்கு

விழித்துப் புத்தகம் படிக்காதே. நேரத்தோடு படுத்துக்கொண்டு விடு. உடம்புக்கு வந்தால் செய்வதற்கு மனிதர்கள் யாரும் அங்கு கிடையாது என்பதை ஞாபகம் வைத்துக் கொள்' என்பதாக அம்மா திரும்பத் திரும்ப அவனுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தாள். கண்ணாயிரத்தினிடம் கடன் வாங்கிய தொகையை வைத்து மாடியை இடித்துக் கட்டுவதற்காகக் கொத்தனார்களையும் காண்ட்ராக்டர் களையும் தேடி அலைந்து கொண்டிருந்தார் அப்பா. பகல் நேரத்திலேயே புத்தக அலமாரிகளிலிருந்து தன்னோடு ஊருக்குக் கொண்டு போவதற்குத் தேவையான புத்தகங்களைப் பிரித்து எடுத்துக் கொண்டு விட நினைத்த சத்தியமூர்த்தி இப்போது அந்த வேலையில் ஈடுபடலானான். மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கவிதைகள், திருக்குறள் - பரிமேலழகர் உரை, தொல்காப்பியப் பகுதிகள், சங்க இலக்கியங்கள், கம்பராமாயணம், அடிஸன், கோல்ட்ஸ்மித், பிராட்லி முதலியவர்களின் நூல்கள் ஆகியவற்றைத் தனியே பிரித்து அடுக்கினான். அந்தப் பெரிய டிரங்குப் பெட்டியின் முக்கால் பகுதி இடத்தைப் புத்தகங்களே நிரப்பிக் கொண்டுவிட்டன. தேடிக் கண்டுபிடித்து அதில் வைப்பதற்கு இன்னும் புத்தகங்கள் இருந்தன.

"நீ பெட்டி நிறையப் புத்தகங்களை அடுக்குவதைப் பார்த்தால் படிப்புச் சொல்லிக் கொடுக்கப் போகிறாயா? அல்லது படிக்கப் போகிறாயா என்று சந்தேகமாயிருக்கிறது அண்ணா!' என்றாள் தங்கை ஆண்டாள். -

படிக்கிறவனைக் காட்டிலும் படிப்புச் சொல்லிக் கொடுக்கிறவன் தான் அதிகமாகப் படிக்கவும், சிந்திக்கவும் வேண்டியிருக்கும் என்பதைத் தங்கை புரிந்து கொள்ளாமலிருப்பதை எண்ணித் தனக்குத்தானே சிரித்துக் கொண்டான் அவன். பெட்டியில் புத்தகங் களுக்குக் கீழே அடி மூலையில் பாரதி தனக்கு அந்தரங்கமாக எழுதியிருந்த கடிதங்கள் இரண்டையும் போட்டு வைத்தான். அபர்க்ராம்பி, வின்சென்டர், செயிண்ட்ஸ்பரி ஆகிய தலைசிறந்த ஆசிரியர்களின் இலக்கியத் திறனாய்வு நூல்கள் சிலவற்றை ஒரு நண்பன் இரவல் வாங்கிக்கொண்டு போயிருந்தான். ஊருக்குப் புறப்படுவதற்கு முன்பு அந்த நண்பனைத் தேடிப் புத்தகங்களைத் திரும்பப் பெறவேண்டும். ஒவ்வொருவராகப் பார்த்துச் சொல்லி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/188&oldid=595185" இலிருந்து மீள்விக்கப்பட்டது