பக்கம்:பொன் விலங்கு.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 203

'இந்த நூற்றாண்டில் சமுதாயத்தின் பொதுவான சொத்து எதுவாயிருக்கிறது என்று பார்த்தால் பெரிய ஊர்களில் பரவலான கோழைத்தனமும் சிறிய ஊர்களில் பரவலான முரட்டுத்தனமும்தான் நிரம்பிக்கிடக்கின்றன. அப்படியிருக்கும்போது நல்லது கெட்டது தெரிந்தவர்கள் குறைவாயிருப்பதில் ஆச்சரியம் என்ன?" என்று குமரப்பனை எதிர்த்து விவாதம் செய்தான் சத்தியமூர்த்தி. இருவரும் பேசிக் கொண்டே அந்திக் கடைப்பொட்டலுக்கருகே மீனாட்சி பூங்காவுக்குள் போய் உட்கார்ந்தார்கள். சத்தியமூர்த்தி தன் நண்பனிடம் மனம் உருகிக் கூறலானான்.

"இனிமேல் இப்படி நாம் ஒருவருக்கொருவர் சந்தித்துப் பேசிக் கொள்ளும் வாய்ப்புகள் இல்லாமற் போய் விடுமே? எப்போதாவது கல்லூரி விடுமுறைகளின்போது நான் மதுரைக்கு வந்தால்தான் உண்டு. ஊரைப் பிரிந்து போவதைவிட உன்னைப் பிரிந்து போவதுதான் எனக்குப் பெரிய வேதனை குமரப்பன்! முயன்றால் வாழ்வதற்குத் தேவையான வசதிகள் எல்லா இடத்திலும் கிடைத்துவிடும். ஆனால் மனம் விட்டுப் பழகுவதற்குச் சத்தியமான நண்பர்கள் எல்லா இடத்திலும் கிடைக்க மாட்டார்கள்." "கவலைப்படாதே, சத்யம்! கடிதங்களால் சந்தித்துப் பேச முடியும் நாம். நான் அன்று ஒரு நாள் சித்திரைப் பொருட்காட்சி முடிந்து திரும்பிய போது கூறியது உனக்கு நினைவு இருக்குமென்று எண்ணுகிறேன். வழி உண்டாக்கிக் கொண்டு நடக்கிறவனுக்கு எங்கே போனாலும் நல்ல நண்பர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள்" என்றான் குமரப்பன். -

"ஆயிரம்சொல், குமரப்பன் நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். உன்னைப்போல் இன்னொரு நண்பன் எனக்குக் கிடைப்பான் என்று இனி நான் எதிர்பார்க்க முடியுமா? நீ மிகவும் அதிசயமானவன்."

"அதெல்லாம் பெரிதாகச் சொல்லிப் புகழாதே. இப்படி இன்னும் எத்தனை அதிசயமானவர்களைச் சந்திக்கப் போகிறாயோ? வாழ்க்கையில் ஒவ்வொரு பெரிய அநுபவமும் அதற்கு முந்திய அநுபவங்களை ஞாபகத்தில் மங்கச் செய்து விடுவது வழக்கம். என்னுடைய நினைவையும் மங்கச் செய்து விடும்படியான பெரிய அநுபவங்கள் உன் வாழ்க்கையில் போகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/205&oldid=595225" இலிருந்து மீள்விக்கப்பட்டது