பக்கம்:பொன் விலங்கு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

பொன் விலங்கு

20 பொன் விலங்கு

சொல்லி மன்னிப்புக் கேட்க வேண்டியிருக்கும் என்று தான் எதிர்பார்த்திருந்ததற்கு மாறாகப் பண்புடனும், பெருந்தன்மையுடனும் தன்னை அழைத்துப் போக ஒரு மனிதர் காத்திருப்பதைப் பார்த்தவுடன் சத்தியமூர்த்தி வியப்படைந்தான்.

கல்லூரிக் காம்பவுண்டுக்கு மிக அருகிலேயே தனியாக மேடு போலிருந்த பகுதியில் அடர்ந்ததோட்டத்தினிடையே தொழிலதிபர் பூபதியின் பங்களா அன்மந்திருந்தது. வீட்டுக்கு முன் நீண்ட பாதையில் இரு புறமும் குண்டு குண்டாகப் பூத்திருந்த மல்லிகைப் பூக்களின் நறுமணத்தை நுகர்ந்து கொண்டே நடந்தான் சத்தியமூர்த்தி.

அந்தப் பங்களாவின் முன்புறத்து அறை வாயிலுக்கு வந்ததும் சத்தியமூர்த்தியை உள்ளே செல்லுமாறு அறைப்பக்கம் கையைக் காண்பித்துவிட்டு உடன் வந்தவர் வெளியிலேயே நின்றுகொண்டார். அறைக்குள் நுழைந்ததுமே இலட்சிய ஆர்வமும், செல்வச் செழிப்பின் பெருந்தன்மையும் தெளிவாகத் தெரியும்படி வீற்றிருந்த அந்த முதியவரைத்தான் சத்தியமூர்த்தியின் கண்கள் முதன் முதலாகச் சந்தித்தன. பக்கத்தில் நாற்காலியில் அமர்ந்திருந்தவர்தான் கல்லூரியின் பிரின்ஸிபாலாக இருக்க வேண்டுமென்றும் அனுமானித்துக் கொள்ள முடிந்தது. சத்தியமூர்த்தி இருவருக்கும் வணக்கம் செலுத்திவிட்டு நின்றான்.

"இப்படி உட்காருங்கள்" என்று தமக்கு எதிரேயிருந்த நாற்காலியைச் சுட்டிக் காண்பித்தார் பூபதி. சத்தியமூர்த்தி அடக்க ஒடுக்கமாக உட்கார்ந்தான். பிரின்ஸிபால் தம் கையிலிருந்த பைல் கட்டை அவிழ்த்து ஒரே ஒரு விண்ணப்பத்தை மட்டும் அதிலிருந்து உருவி எடுத்துப் பூபதிக்கு முன்னால் வைத்துவிட்டு "கே. சத்தியமூர்த்தி ஃபார் டமில் லெக்சரர் போஸ்ட்..." என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டுப் போய்ப் பழையபடி தம் நாற்காலியில் அமர்ந்தார். இருக்கிற நிலைமையைக் கூர்ந்து நோக்கி அநுமானம் செய்ததில் முழு இண்டர்வியூவையும் கல்லூரி அதிபரே நடத்திவிடுவார் போல தோன்றியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/22&oldid=1405647" இலிருந்து மீள்விக்கப்பட்டது