பக்கம்:பொன் விலங்கு.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - 257

வகுப்பறையிலிருந்து வெளியே வந்த சத்தியமூர்த்தி அந்த அறையின் கதவோரமாக நின்றுகொண்டிருந்த பூபதியைப் பார்த்துத் திகைத்தான். அவனைப் பின்பற்றிக் கூட்டமாக வந்துகொண்டிருந்த மாணவர்கள் நிர்வாகியே அங்கு வந்து நின்றுகொண்டிருப்பதைப் பார்த்து விலகிப் பின்தங்கினர். ஆனால் பூபதியின் முகமோ காணாததைக் கண்டுவிட்டதுபோல் மலர்ந்து போயிருந்தது. அந்த வகுப்புத் தொடங்கிய சிறிது நேரத்துக்கெல்லாம் அவர் வந்து நின்று கேட்க ஆரம்பித்திருக்க வேண்டுமென்று தோன்றியது.

"இளம் நண்பரே! முதலில் என்னுடைய மனப்பூர்வமான பாராட்டுதல்களை ஏற்றுக்கொள்ளுங்கள். கல்லூரி வகுப்பறையில் நிகழ்த்தப்படுகிற ஒரு சாதாரண விரிவுரையில் இத்தனை மெருகும், நயமும் அமைய முடியும் என்பதை நான் இன்றுதான் முதல் முதலாகக் கண்டேன். வீ வாக்ஸ் இன் பியூட்டி என்று இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது' என்று கூறியபடியே அருகே வந்து அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார் அவர். மேலே விரைவாக நடந்து போக முடியாதபடி தன்னைத் தயங்கி நிற்கச் செய்துவிட்ட அந்தப் புகழுக்காக நாணினான்சத்தியமூர்த்தி. புகழோ பழியோ, எதுவானாலும் இரண்டுமே ஒரு நல்ல மனிதனை அவன் இயல்பாக நடந்து போகிற நடையிலிருந்து சில விநாடிகள் நிறுத்தித் தயங்க வைத்து விடக் கூடியவை என்பதை சத்தியமூர்த்தி பலமுறை அனுபவத்தில் கண்டிருக்கிறான். புகழால் தயங்கி நின்றாலும் அது தயக்கம்தான். பழியால் தயங்கி நின்றாலும் அது தயக்கம்தான். எப்படித் தயங்கினாலும் சரி, தயங்கி நிற்கிறோம் என்ற விளைவுதான் முக்கியம்.நடந்து போகிற ஒருவனைக்கல் தடுக்கி நிற்கச்செய்தாலும் தடைதான் கைதட்டி அழைத்து நிற்கச் செய்தாலும் தடைதான். இன்னும் சொல்லப் போனால் பழியால் தயங்கி நிற்பதைவிடப் புகழால் தயங்கி நிற்பதுதான் அதிகமாக இருக்கும் என்பதைப் பல மேதைகளுடைய வாழ்க்கையில் கூட ஒப்பு நோக்கி வியந்திருக் கிறான் சத்தியமூர்த்தி. நடந்துபோவதற்கு முந்தும் வலது காலும் ஒரு நாகரிகத்துக்காகப் போகவிடாமல் தயங்கி நிற்க வேண்டிய அவசியமுமாகப் பூபதியை எதிர்கொண்டான் அவன்.

பொ. வி - 17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/259&oldid=595343" இலிருந்து மீள்விக்கப்பட்டது