பக்கம்:பொன் விலங்கு.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 269 'அந்த வீட்டில் அந்தச் சூழ்நிலையில் தன் உடம்பையும் மனத்தையும் எப்படிப் பரிசுத்தமாகப் பாதுகாத்துக்கொண்டு வாழ்வதற்கும் முடியப்போகிறது? என்று எண்ணித் தவித்தபோது எதிர்காலம் இருண்டு தெரிந்தது. கேளாதே வந்து கிளைகளாய்த் தோன்றி என்று ஒரு பழைய பாட்டு ஆரம்பமாகும். இந்த வீட்டைத் தேடி வந்து இந்த அம்மாவுக்குப் பெண்ணாய்ப் பிறந்து இந்தப் பூமியில் இப்படி அவதிப்பட வேண்டும் என்று யார் தவம் இருந்தார்கள்?' என்று எண்ணும் போது அவளுக்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. செந்தாமரைப் பூக்களாய் மலர்ந்த கைகளும், கால்களும் ஒளிரச் சத்தியமூர்த்தி அந்த வீட்டின் வாயிற்படிகளில் ஏறிவந்த இனிய நாட்கள் அவளுக்கு நினைவு வந்தன. கையில் அவனளித்த மோதிரத்தையும் இதயத்தில் அவனைப் பற்றிய நினைவுகளையும் அணிந்து கொண்டு நேரம் போவது தெரியாமல் தெருக்கோடியை வெறித்துப் பார்த்தபடி நின்றாள் அவள். இந்த வழியாகத்தான் அவர் கம்பீரமாக நிமிர்ந்து நடந்து வந்தார். இந்த வழியாகத்தான் திரும்பிப் போனார் என்று வந்த வழியும் போன வழியும் ஞாபகத்தில் இருந்தன. தெருவில் எங்கிருந்தோ நாத வெள்ளமான மதுர அலைகளோடு பொங்கிய நாதஸ்வரக்காரரின் தோடியும், மழை பெய்து நின்றிருந்த சூழ்நிலையும், இசை வண்டு முரல்வதுபோல் வீணையின் பக்குவமான ஒலியும், அவளை வேறு உலகத்தில் வேறு ஞாபகத்துக்குக் கொண்டு போயிருந்தபோது அம்மா வந்து காதருகில் முணுமுணுத்து இந்த உலகத்தை ஞாபகப்படுத்தினாள்.

'வீட்டுக் கூடத்திலே பெரிய மனிசங்க.ரெண்டுபேரு வந்து பேசிக்கிட்டிருக்கிறப்போ, இங்கே தெருவிலே என்னா பாழாப் போறதுன்னு வந்து நின்னுக்கிட்டிருக்கிறே? உன்னையத்தாண்டி கேக்குறேன், உள்ளே வந்து உட்கார்ந்து தொலை. வந்திருக் கிறவங்களுக்கு இதமா ரெண்டு வார்த்தை சிரிச்சுப் பேசு. அதிலே ஒண்ணும் கொறைஞ்சுபோயிடாது."

"நான் என்னம்மா பேசப் போறேன்? எல்லாம் நீயே பார்த்துப் பேசி அனுப்பிவிடு' என்று அவள் வேண்டாவெறுப்பாகத் தட்டிக் கழிக்க முயன்றபோது அம்மா கோபித்துக் கொண்டு சீறினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/271&oldid=595371" இலிருந்து மீள்விக்கப்பட்டது