பக்கம்:பொன் விலங்கு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

27

முடிகிற கோடி நுனியில் காதோரமாக இமைகளின் பூமயிர் மேல் நோக்கி ஏறி இறங்கி ஒரு சுழிப்புச் சுழித்திருந்த அழகையும், இந்த இடம்தான் நீங்கள் மயக்கப்படுகிற இடம் என்று அந்த இடத்தில் கோடு கீறிக்காட்டினாற் போன்ற புருவங்களின் வனப்பையும் பார்த்த சத்தியமூர்த்தி அந்த அழகை எவ்வளவுக்கெவ்வளவு அருகில் நெருங்கிக் கண்டானோ, அவ்வளவுக்கவ்வளவு தனக்கும், அதற்கும் நடுவில் உள்ள தொலைவை அவனால் உணர முடிந்தது.

ட்ரேயைக் கொண்டுபோய் வைத்துவிட்டு மறுபடி அந்த அறைக்குள் வந்து புத்தக அலமாரிக்குப் பக்கத்தில் ஒதுங்கி நின்றுகொண்டாள் அந்தப் பெண். மூன்று ஆண்பிள்ளைகள் உட்கார்ந்திருக்கிற இடத்தில் உள்ளே நுழைந்தவுடன் நான்காவது நாற்காலியில் தானும் உட்கார்ந்து விடாமல் சற்றே நாணத்தோடு அவள் ஒதுங்கி நின்றது சத்தியமூர்த்திக்கு மிகவும் பிடித்தது. செழிப்பும் பண வசதியும் உள்ள பல வீடுகளில் பெண்கள் ஆண்களாக நடந்து கொள்வதைச் சத்தியமூர்த்தி கவனித்திருக்கிறான்; வெறுத்திருக்கிறான்.

"பணக்கார வீட்டுப் பெண்களிடம், சிறிதும் இல்லாதது நாணம்; அதிகமாக இருப்பது அகம்பாவம். பெண்ணோடு அகம்பாவத்தையும் சேர்த்துப் பார்ப்பது தண்ணென்று குவித்த மணமிக்க மலர்க்குவியலில் நெருப்புப் பிடிப்பதைப் பார்ப்பதுபோல் பொருத்தமில்லாத சேர்க்கையாகத் தோன்றுகிறது. பெண் என்றால் அமைதி என்று அர்த்தம். இன்றோ அது பெண்ணைத் தவிர எல்லாரிடமும் இருக்கிறது" என்று நண்பர்களிடம் பல சமயங்களில் பேசியிருக்கிறான் அவன் பூபதியின் மகள் பாரதி அவன் சந்தித்த செல்வக்குடும்பத்துப் பெண்களில் முற்றிலும் புதுமையானவளாக இருந்தாள்.

பாரதியைப் பற்றிய அவன் சிந்தனைகளும் கவனமும் கலைந்து போகும்படி பூபதியின் கேள்விகள் மீண்டும் அவனை நோக்கி ஒலித்தன. -

"மிஸ்டர் சத்தியமூர்த்தி! இந்தக் கேள்வியை உங்களிடம் கேட்பதற்காக நீங்கள் வருத்தப்படக்கூடாது. நீங்கள் படித்துப் பட்டம்பெற்ற கல்லூரி, அரசியல் குழப்பங்களுக்கும் மாணவர்களின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/29&oldid=1405646" இலிருந்து மீள்விக்கப்பட்டது