பக்கம்:பொன் விலங்கு.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 பொன் விலங்கு

இரண்டு மாணவர்கள் ஆதரித்து வழி மொழிந்திருக்கிறார்கள். நாலரை மணிக்குப் புலிகோவிந்தன்கோஷ்டியைப் பிடிக்காத வேறு ஒரு மாணவர் கூட்டம் இன்னொரு பையனை அழைத்து வந்து ஆதரவுக் கையெழுத்திட்டு அபேட்சை மனுக் கொடுக்கும்படி செய்தது. மறுநாள் மாலைவரை அபேட்சை மனுக் கொடுப்பதற்கு நேரம் இருப்பதால் இன்னும் மனுக்கள் வரலாமென்று சத்தியமூர்த்தி எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். புலி கோவிந்தனுடைய மனுவை ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லி நிராகரித்து விடவேண்டும் என்று வைஸ் பிரின்ஸிபால் வந்து காதைக் கடித்தார். சத்தியமூர்த்தி அதற்குச் சம்மதிக்கவில்லை.

"அந்தப் பயல் ரொம்பவும் அர்ரகண்ட் மாரல் ரெக் போன வருடம் பையன்களைக் கூட்டம் கூட்டி வைத்து ஹாஸ்டல் சாப்பாட்டை பகிஷ்கரித்து 'ஸ்டிரைக்' பண்ணத் தூண்டினவன் இந்தப் புலி கோவிந்தன்தான் காலேஜ் ஹாஸ்டல் பாத்ரும் குழாய்களில் தண்ணீர் வருகின்றதா, அல்லது கண்ணிர் வருகின்றதா? அவைகள் ஏன் இப்படி நன்றாகத் தண்ணீர் வராமல் சொட்டுச் சொட்டாக அழுவதுபோல் கண்ணீர் சிந்துகின்றன? என்று எதுகை மோனையோடு பேசினவன் இவன், ஜாக்கிரதை இவனை யூனியன் பிரஸிடெண்டாக வர விட்டாச்சோ, அப்புறம் காலேஜ் குட்டிச்சுவர்தான்..." என்று மிரட்டினார் அவர். "புலி கோவிந்தனும் சட்டப்படி இந்தக் கல்லூரி மாணவன். கல்லூரி அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்தரில் அவன் பெயர் இருக்கிறவரை அவனுக்கும் மற்ற மாணவர்களுக்குள்ள அத்தனை உரிமைகளும் உண்டு. அப்படியிருக்கும் போது அவனுடைய அபேட்சை மனுவை நான் எப்படி நிராகரிப்பது?" என்று சத்தியமூர்த்தி மறுத்துவிட்டான். ‘மாணவர்களுக்குப் பயப்படுகிற இந்த ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்து உருவாக்குகிற பட்டதாரிகள் தானே நாளைய சமூகத்தில் போய் நிறையப் போகிறார்கள்?' என்று நினைத்தபோது சத்தியமூர்த்தி மனம் வருந்தினான். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/360&oldid=595566" இலிருந்து மீள்விக்கப்பட்டது