பக்கம்:பொன் விலங்கு.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406 பொன் விலங்கு

போலக் கற்பனை செய்தபோது அந்தக் கற்பனையைக்கூடப் பொறுத்துக் கொள்ள முடியாத அத்தனை துயரத்தை அடைந்தது அவன் மனம். தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத நிலையில் அவன் அழத்தொடங்கியபோது குமரப்பன் அருகில் வந்து ஆறுதல் கூறினான். -

'உன் துயரம் எனக்குப் புரிகிறது சத்தியம்! ஆனால் உன்னையும் என்னையும் போல் ஆண் பிள்ளைகளின் துயரம் உணர்ச்சியளவில் நிற்க வேண்டுமே ஒழிய அழுகையாக வெளிப்படக்கூடாது. பெண்கள் எதற்காகவும் வாய்விட்டு அழலாம். ஆண்கள் இதயத்தினால் மட்டுமே அழமுடியும். பெருமைக்கும் வலிமைக்கும் உரியவனான ஆண்மகன் துயரப்படும் போதுகூட ஆண்மை அழியாமல் துயரப்படவேண்டும். என்ன நேர்ந்துவிட்டதென்று இப்படிக் கண் கலங்குகிறாய் நீ? மோகினிக்கு இப்படிப்பட்ட துயரம் நேர்ந்திருக்கக் கூடாதுதான். நேர்ந்துவிட்ட பிறகு நீயும் நானும் என்ன செய்ய முடியும்? நாளைக் காலையில் முதல் பஸ்ஸில் மதுரை சென்று ஆஸ்பத்திரியில் அவளைப் பார்த்துவிட்டு வரலாம். என்னுடைய கடையில் இப்போதுதான் தொழில் சுறுசுறுப்பாக நடக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில் நான் தொழிலை விட்டுவிட்டுக் கடையை இழுத்துப் பூட்டிக் கொண்டு உன்னோடு மதுரைக்கு வரமுடியாது. ஆனாலும் உன்னைத் தனியாக அனுப்பு வதைக் காட்டிலும் நானும் உடன் வருவது நல்லதென்று எண்ணி நான் வருகிறேன். பொறுமையாக இரு காலையில் புறப்பட்டுப் போய் பார்க்கலாம்...' என்றான் குமரப்பன். - . . . .

மலைக்காட்டு ஊரில் ஒரு வார காலமாக ஒடியாடி உழைத்துக் களைத்துப்போய் வந்திருந்தும் அன்றிரவு சத்தியமூர்த்தி உறங்கவேயில்லை. மோகினியைப் பற்றிய ஞாபகங்களிலேயே அந்த இரவு கழிந்தது. அவளுடைய நிகழ்காலத் துயரத்தை நினைத்தபோது கடந்தகாலத் துயரங்களாக அவள் கூறியிருந்தவற்றையும் எதிர்காலத் துயரங்களாகத் தன்னால் அநுமானிக்க முடிந்தவற்றையும் சேர்த்து எண்ணினான் சத்தியமூர்த்தி. மறுநாள் காலை ஐந்தரை மணிக்கு விடிகிற நேரத்துக் கருக்கிருட்டில் நண்பன் குமரப்பனோடு பஸ் நிலையத்துக்குப் போய் மதுரைக்குப் பஸ் ஏறியபோது இன்னும் மூன்று-மூன்றரை மணி நேரம் பயணம் செய்து போக வேண்டும் என்று நினைப்பதற்கே பொறுமையின்றி இருந்தான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/408&oldid=595650" இலிருந்து மீள்விக்கப்பட்டது