பக்கம்:பொன் விலங்கு.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 439 சத்தியமூர்த்தி அந்தக் கூடத்துக்குள் நுழைந்து நின்றவுடனே சீட்டு விளையாடிக் கொண்டிருந்த பூபதி அவனைப் பார்த்துவிட்டார். அதே சமயத்தில் அவனால் மனப்பூர்வமாக வெறுக்கப்பட்ட மற்ற இருவரும்கூட அவன் அங்கு வந்து நிற்பதைப் பார்த்து விட்டார்கள். கருகருவென்று மயிரடர்ந்த புருவங்களை மேலே ஏற்றி இறக்கி வளைத்து ஜமீன்தார் தன்னைப் பார்த்த பார்வை நெஞ்சில் வந்து குத்தித் துளைத்தெடுப்பது போலிருந்தது சத்தியமூர்த்திக்கு. நாடு சுதந்திரம் பெற்று ஜமீன் ஒழிப்பு, நிலப்பிரபுத்துவ முறையைத் தீர்த்துக் கட்டும் நில உச்ச வரம்பு ஆகிய சட்டங்களெல்லாம் வந்த பின்பும் இன்றைய நிலையில்கூட மஞ்சள்பட்டியாரைப் போன்றவர்கள் ஊருக்கு ஊர் பங்களாக்களும், ஆடம்பர ஏற்பாடுகளும் செய்துகொண்டு பழைய ஜமீன்தார் வீறாப்புகளைச் சிறிதும் இழக்காமலும் குறைத்துக் கொள்ளாமலும் வாழமுடிகிறதே என்பதை எண்ணிய போது சத்தியமூர்த்தி மனம் கொதித்தான். ஜமீன்தார் முறையை ஒழித்துவிட்டாலும் பணக்காரர்களில் பலருடைய இரத்தத்தில் ஓர் இயற்கையாக ஊறிப்போயிருக்கும் ஜமீன்தார் மனப்பான்மையை ஒருபோதும் ஒழிக்க முடியாதுபோல் தோன்றியது. ஜமீன் ஒழிப்புக்குப்பின் இத்தனை ஆண்டுகள் கழிந்த பிறகும் மக்கள் மஞ்சள்பட்டியாரை ஜமீன்தார் என்றுதான் சொல்கிறார்கள். பழைய டாம்பீகங்களையும் ஆடம்பரங்களையும் விட்டுவிடாமல் நாட்டியத்தையும் சங்கீதத்தையும் காப்பாற்றுவதாகச் சொல்லிக்கொண்டு ஜமீன்தார் மஞ்சள்பட்டியில் இன்னும் நவராத்திரி விழாக் கொண்டாடுகிறார். மஞ்சள்பட்டி என்கிற சிறிய ஊரில் இருப்பதைவிட அதிக வசதிகளும் ஆடம்பரங்களும் நிறைந்த மாளிகைகளும் பங்களாக்களும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் கோடை வாசத்துக்குரிய மலைநகரங்களிலும் ஜமீன்தாருக்குச் சொந்தமாக இருக்கின்றன. -

ஜமீன்தாரின் கொடிய கண்பார்வை தன்மேல் பட்டுத் திரும்பிய சில கணங்களில் இவ்வளவும் நினைத்தான் சத்தியமூர்த்தி. இதற்குள் பூபதியே அவன் பக்கம் எழுந்து வந்து விட்டார். "வாருங்கள் என் கடிதம் கிடைத்ததா? அப்போதிருந்து உங்களைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்று புன்னகையோடு கூறிக்கொண்டே அவன் பக்கத்தில் வந்து நின்றார் பூபதி. அவருக்குப் பத்மபூரீ விருது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/441&oldid=595687" இலிருந்து மீள்விக்கப்பட்டது