பக்கம்:பொன் விலங்கு.pdf/579

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 577

சத்தியமூர்த்தி இதைக் கேட்டு நண்பனுக்கு மறுமொழி ஒன்றும் கூறவில்லை. பேசாமல் நடந்தான். ஜமீன்தாருடைய உத்தரவுக்குப் பயந்து மனப்பூர்வமாக ஆசைப்பட்டு மல்லிகைப் பந்தலுக்கு அவள் வந்திருப்பாள் என்றோ, விருப்பத்தோடு பட்டுப்புடவைக் கடைக்குப் புறப்பட்டிருப்பாள் என்றோ சத்தியமூர்த்தியும்கூடத் தன் அந்தரங்கத்தில் நம்பவில்லை. அவளுடைய இதயம் தன்னிடம்தான் இருக்கிறதென்று அங்கீகரித்துக் கொண்டிருந்தும் இத்தகைய வேளைகளில் மனம் தடுமாறிக் குமுறாமல் இருக்க முடியாதபடி தானும் உணர்ச்சிகளால் உந்தப்படுவதைத் தவிர்க்க இயலாது தவித்தான் சத்தியமூர்த்தி. அநுதாபமும், கேர்பமும் கலந்த இந்த விநோத உணர்ச்சிக்கு அவன் பலமுறை ஆளாகியிருக்கிறான். ஆனால் ஒவ்வொரு முறையும் இந்த உணர்ச்சி மோகினியின் காரணமாகவேதான் அவனுக்கு ஏற்பட்டிருக்கிறது. அநுதாபத்தை மறுபுறமாகக் கொண்ட ஆத்திரம் அன்புடையவர் மேல்தான் ஏற்பட முடியும். சத்தியமூர்த்தியின் மனத்தில் அந்த வேளையில் பொங்கிக் கொண்டிருந்த ஆத்திரமும் அத்தகையதுதான். மனம் குழம்பியிருந்த இந்த விநாடியிலும்கூட மதுரையிலிருந்து நவராத்திரி விடுமுறை முடிந்து தான் மல்லிகைப்பந்தலுக்குப் புறப்படுவதற்கு முன் கோச்சடையிலுள்ள மஞ்சள்பட்டி அரண்மனையில் மோகினிக்கும் தனக்குமிடையே நிகழ்ந்த ஓர் உருக்கமான உரையாடல் இப்போது சத்தியமூர்த்திக்கு நினைவு வந்தது. அவளைப்பற்றிய அந்தப் பழைய நினைவு இப்போது அவனுக்கு ஆறுதலாயிருந்தது.

'உன்மேல் கோபப்பட்டு என்ன பயன் மோகினி? நீ ஒரு பேதை உன்னைச்சந்திக்காமல் இருந்தால் நானும் என்னுடைய வாழ்க்கையில் ஒர் அழகிய பேதையின் அவலங்களை நினைத்து இப்படிக் கண்கலங்க நேர்ந்திருக்காது' என்று தான் கூறியவுடன், அப்படிச் சொல்லாதீர்கள் உங்களைச்சந்திக்காமலிருந்திருந்தால் நான் வாழவே நேர்ந்திருக்காது' என்பதாக அவள் மறுமொழி கூறிவிட்டு அழுத உருக்கமான நிகழ்ச்சி. இப்போது அவனுக்கு ஞாபகம் வந்தது. ஆஸ்பத்திரியில் வஸந்தசேனை சாருதத்தன் கதையை மோகினிக்குக் கூறிய சம்பவமும் நினைவு வந்து அவன் மனத்தைக் கலக்கிக்கொண்டிருந்தன. நண்பன் குமரப்பனோடு நடந்து

பொ.வி - 37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/579&oldid=595838" இலிருந்து மீள்விக்கப்பட்டது