பக்கம்:பொன் விலங்கு.pdf/603

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 601

கல்வித் திறனும், நெஞ்சுரமும் உள்ள மனமுதிர்ச்சியாளர்கள் பலரே இந்தச் சோதனையில் தோற்றுவிடும்போது பாரதியைப்போல் ஓர் அபலைப் பெண் மட்டும் எப்படி வென்றுவிட முடியும்? நீண்ட நேரத் தயக்கத்துக்குப்பின் அந்தக் கடிதத்தைத் தானும் படித்துவிட வேண்டுமென்ற ஆவல்தான் அவள் மனத்தில் வென்றது.

நடுங்கும் கைகளால் மோகினியின் அந்தக் கடிதத்தை உறையிலிருந்து எடுத்துப் படிக்கத் தொடங்கினாள் அவள். கார் அதிக வேகமில்லாமல் லேக் அவென்யூவை நோக்கி மெல்லப் போய்க் கொண்டிருந்தது. அந்தக் கடிதத்தைப் படித்து முடித்துவிட்டு மீண்டும் உறைக்குள் வைத்தபோது தான் தவறு செய்து விட்டோம்' என்ற உணர்வு அவளுள் எழுந்தது; படிக்கத் தொடங்குவதற்கு முன்பும் அதே உணர்வுதான் இருந்தது. படித்தபோது மட்டும் ஆவல் பெருகி அவளுடைய கண்களுக்கு முன் நியாயத்தைச் சிறியதாக மறைத்துவிட்டது. தவறு செய்வதன் இலக்கணமே அப்படித்தான். செய்யத் தொடங்குமுன்பிருந்த விழிப்பும் எச்சரிக்கையும் அநேகமாகப் பயன்படுவதில்லை, செய்து முடித்த பிறகு வருகிற விழிப்பினாலும் எச்சரிக்கையினாலுமோ எந்த விதத்தினாலும் பயனே இல்லை. மோகினி சத்தியமூர்த்திக்கு மிக உருக்கமாகவும் அந்தரங்கமாகவும் காதல் கனியக் கனிய எழுதியிருந்த அந்தக் கடிதத்தைப் பாரதி படித்திருக்கக் கூடாதுதான்! ஆனால், தான் அதைப் படித்திருக்கக்கூடாது' என்ற உணர்ச்சியே அதைப் படித்த பின்புதான் அவளுக்கு ஏற்பட்டது. படித்ததன் விளைவோஅவளுக்கு முன்னைக் காட்டிலும் அதிகமாக அழுகை குமுறிக்கொண்டு வந்தது. திடீரென்று இருந்தாற்போலிருந்து தான் யாரும் விரும்பக்கூடாத குரூபியாகிவிட்டாற்போலவும், தன்னிடமிருந்த சிறிய அழகும் இப்போது மோகினி ஒருத்தியிடமே போய்ச் சேர்ந்து அந்தப் பேரழகோடு சங்கமமாகி விட்டாற் போலவும் மோகினி எல்லாரும் விரும்பத்தக்க ஒரே பேரழகியாக ஒளிர்வதாகவும் ஒரு பிரமை கொண்டாள் பாரதி. மோகினிக்கும்சத்தியமூர்திக்கும் இடையே தவிர்க்க முடியாத பிணைப்பும், அன்பும் இருப்பதாக இந்தக் கடிதம் பாரதிக்குச் சொல்லிவிட்டது. அதே சமயத்தில் இன்னொரு விஷயத்தைப் பற்றித் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியாமல் மனம் குழம்பினாள் பாரதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/603&oldid=595866" இலிருந்து மீள்விக்கப்பட்டது