பக்கம்:பொன் விலங்கு.pdf/661

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 659

தொடங்கிய விருந்து முடியவே ஏழரை மணி ஆகிவிட்டது. அப்புறம் மாலையிட்டுப் பாராட்டுரைகள் வழங்கிக் கூட்டம் முடிய ஒன்பதரை மணிக்கு மேல் ஆகிவிட்டது. கூட்டம் முடிந்த பின்னும் மாணவர்கள் பலாப்பழத்தைச் சுற்றிய ஈக்களைப்போல் சத்தியமூர்த்தியை மொய்த்து நெருங்கிப் பேசிக்கொண்டிருந்தார்கள். அவரிடம் பேசுவதற்குரிய தனிமை அப்போது கிட்ைக்குமென்று தோன்றவில்லை பாரதிக்கு. மறுநாள் அதிகாலையில் அவரை அவருடைய அறையிலேயே போய்ப் பார்ப்பதென்ற முடிவுடன் திரும்பிவிட்டாள் அவள்.

மாலை ஆறு மணியிலிருந்து இரவு ஒன்பதரை மணிவரை பாரதி வீட்டிலிருந்து லேக்வியூ ஹோட்டலில் நடை பெற்ற விருந்துக்குப் போயிருந்த அந்த மூன்றரை மணி நேரத்துக்குள் இங்கே வீட்டில் கண்ணாயிரமும் ஜமீன்தாரும் ஒரு பிரளயமே நடத்தியிருந்தார்கள். மல்லிகைப் பந்தலுக்கு வந்த முதல் தினத்திலிருந்து அன்றுவரை ஒரு நாள்கூடமோகினி அவ்வளவு நேரம் தனியாக அந்தக் கிராதர்களோடு வீட்டில் இருக்க நேர்ந்தது இல்லை. கல்லூரி மாணவர்கள் நடத்தும் அந்தப் பிரிவுபசாரவிருந்துக்குத்தான் எந்தத் தொடர்பைக் கொண்டும் போக முடியாத காரணத்தால் அன்று மோகினி வீட்டிலேயே இருக்க வேண்டியதாயிற்று. என்ன பிரிவுபசார - விருந்து யாருக்கு - என்பதைப் பாரதியும் அவளிடம் சொல்லவில்லை. கண்ணாயிரமும், ஜமீன்தாரும் தன்னிடம் ஏதாவது வம்புக்கு வரலாம் என்று பயந்து பாரதி புறப்பட்டதும்மோகினியேதன் அறைக்கதைவை உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டு ஏதோ புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கியிருந்தாள். பத்துநிமிடங்கள்கூடஆகியிருக்காது. அதற்குள் யாரோ வந்து கதவைத் தட்டினார்கள். புறப்பட்டுப்போன பாரதியே எதையாவது மறந்து போய்விட்டு மறுபடி வந்து கதவைத் தட்டுகிறாளோ என்றெண்ணிக் கதவைத் திறந்தாள் மோகினி. அசடு வழியச் சிரித்துக் கொண்டே ஜமீன்தார் கதவருகே நிற்பதைப் பார்த்து அவளுக்குச் சர்வ நாடியும் ஒடுங்கிப்போய்விட்டது. அவ்வளவு பெரிய பங்களாவில் அப்போது வேறு யாருமே இல்லை. சுற்றிலும் மெல்ல இருட்டத் தொடங்குகிற நேரம். கண்ணாயிரமும் வெளியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/661&oldid=595930" இலிருந்து மீள்விக்கப்பட்டது