பக்கம்:பொன் விலங்கு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 67

ஞானரதத்தில் எங்கோ எழுதியிருக்கும் ஓர் அழகிய வாக்கியம் சத்தியமூர்த்திக்கு நினைவு வந்தது. வெறுப்பிலும் நிராசையிலும் தோய்ந்து மரணவாயிலுக்கு அருகே அடியெடுத்து வைத்துவிட்டுத் திரும்புகிறபோதே இவள் சிரிப்பு இவ்வளவு அழகாயிருக்குமானால் தானே சிரிக்க விரும்பி இவள் சிரிப்பது இன்னும் எவ்வளவு அழகாயிருக்கும் என்று கற்பனை செய்ய முயன்றான் சத்தியமூர்த்தி, இதற்குள் இரயில் வைகைப் பாலத்தைக் கடந்து பொன்னகரம் என்ற உழைப்பாளிகளின் சுவர்க்கத்தையும், பிரம்மாண்டமான பஞ்சாலைக் கட்டிடங்களையும் ஊடுருவிக்கொண்டு மதுரை நகருக்குள் செல்லத் தொடங்கியிருந்தது.

"ஊர் வந்துவிட்டது. இரயிலிலிருந்து இறங்கும்போது இனி எப்போதும் இப்படி அசட்டுக் காரியம் செய்யலாகாது என்ற திடமான நம்பிக்கையோடு மதுரை மண்ணில் இறங்கி நடக்க வேண்டும் நீங்கள்" என்றான் சத்தியமூர்த்தி.

"என்னைப் போன்றவர்கள் வாழ்வதும் வாழ நினைப்பதும் தான் அசட்டுக் காரியம். சாவுதான் எனக்குப் புகலிடம், சாமர்த்தியசாலிகளும் சந்தர்ப்பங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களும் வாழவேண்டிய உலகம் இது. பேதைகளும் அப்பாவிகளும் என் போன்ற அபலைகளும் வாழ்வதற்கு இங்கு இடமில்லை."

'நம்பிக்கைகளை அடைய வேண்டிய வயதில் இப்படி விரக்திகளை நினைக்கவோ பேசவோ கூடாது."

'என்ன செய்யலாம்? என் நிலையில் இதைத் தவிர வேறு எதையும் பேச வலிமையற்றவளாயிருக்கிறேன் நான்."

இந்தப் பெண்ணுக்கு ஆறுதலாக இன்னும் ஏதேதோ சொல்ல வேண்டும் என்று நினைத்தான்சத்தியமூர்த்தி. ஆனால் அதற்குள் இரயில் பிளாட்பாரத்தில் புகுந்து நின்றுவிட்டது. அந்தப் பெண்ணின் தாயும் விழித்துக்கொண்டுவிட்டாள். கூட்டமோ, பரபரப்போ இல்லாமல் பிளாட்டாரம் அழுது வடிந்தது. அந்த இரண்டுங்கெட்ட நேரத்தில் கவனிப்பாரற்று நுழையும் சாதாரணமான பிரயாணிகள் இரயிலின் பக்கமாய் போர்ட்டர்கள் கூட அதிகமாக வந்து எட்டிப் பார்க்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/69&oldid=595961" இலிருந்து மீள்விக்கப்பட்டது