பக்கம்:பொன் விலங்கு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 75

நுழைந்து கூடத்துப் பெஞ்சியில் உட்கார்ந்தான் சத்தியமூர்த்தி. அப்பா ஊஞ்சல் பலகையில் உட்கார்ந்து கொண்டார். கிணற்றடி யிலிருந்து வந்த அம்மா 'இராத்திரி இரயிலில் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டு எதற்காக வருகிறாய்? சாயங்கால வண்டியிலேயே வந்திருக்கலாமே?" என்று விசாரித்துக் கொண்டே வந்து அவனுக்கு எதிர்ப்புறம் ஆவலோடு நின்று கொண்டாள். கூடத்தை மெழுகுவதற்கு வாளி நிறைய நீரோடு வந்த ஆண்டாள் அண்ணனின் வரவினால் ஏற்பட்ட ஆர்வத்தைக் காட்டும் முகத்தோடும் அப்பா வுக்கு அருகே வந்து ஊஞ்சல் சங்கிலியைப் பிடித்துக்கொண்டு நின்றாள். படுக்கையிலிருந்து அப்போதுதான் கண்ணைக் கசக்கிக் கொண்டே பாதித் துக்கமும் பாதி விழிப்புமாக எழுந்திருந்து வந்த கல்யாணியும் இன்னொருபக்கமாக நின்று கொண்டாள். இண்டர்வ்யூ"வின் முடிவு என்ன ஆயிற்று என்பதை அவனாகச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களைப்போல் எல்லாரும் ஆவலடங்கிய நிலையில் மெளனமாயிருந்தார்கள். வீட்டுக்குள் நுழைந்ததும் இப்படி ஒரு காட்சியை அல்லது நிகழ்ச்சியைச் சத்தியமூர்த்தியும் எதிர்பார்த்திருந்தான். எல்லாருடைய கண்களின் பார்வையும் தன் முகத்தையே நோக்கியிருப்பது அவனுக்குப் புரிந்தது. ஒருகணம் எல்லா வேதனைகளையும் மறந்தவனாக நன்றாய் வாய்விட்டுச் சிரிக்க வேண்டும் போலவும் தோன்றியது. அடுத்த கணம் அப்படிச் செய்வதால் 'குடும்பப் பொறுப்புத் தெரியாத பிள்ளை என்று கெட்ட பெயரைத் தாங்க நேரிடுமோ என்ற தயக்கமும் ஏற்பட்டது.

“என்ன ஆண்டாள்? உன் வலது கண் வீங்கினாற் போல் தெரிகிறதே? உள்ளே ஏதாவது வெடித்திருக்கிறதா?' என்று அப்போது அந்த நிலையில் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டு விசாரிக்கத் தேவையில்லாத ஒன்றைத் தங்கையிடம் விசாரித்தான் சத்தியமூர்த்தி.

'ஒன்றுமில்லையே அண்ணா!' என்று ஆண்டாள் சிரித்தாள். அப்புறமும் சிறிது நேரம் அவன் ஏதோ சொல்லப் போகிறான் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்க அவன் ஒன்றும் சொல்லாமலே நேரம் மெளனத்தில் கழிந்தது. அப்பா பொறுமையிழந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/77&oldid=595971" இலிருந்து மீள்விக்கப்பட்டது