பக்கம்:பொன் விலங்கு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

பொன் விலங்கு

முகம் மலரச் சிரிக்கும் சில அபூர்வ யோகிகளைப்போல் வாழ்க்கையின் கவலைகளைச் சுகமாக ஏற்றுக்கொண்டு வளர்வது அவனுக்குப் புதுமையில்லை. நினைவு தெரிந்த நாளிலிருந்து அவன் அப்படித்தான் வளர்ந்திருக்கிறான். இன்னும் நன்றாகச் சொல்லப் புகுந்தால் கல்லூரி நாட்களிலிருந்தே அவன் அப்படித்தான். அவனது படிப்பும் சிந்தனையும் வெறும் புத்தகங்களால் மட்டுமே வளர்ந்ததில்லை. அவற்றின் வளர்ச்சிக்கு வாழ்வில் அவன் அடைந்த கவலைகளும் கஷ்டங்களுமே பெரும்பாலும் உதவி செய்திருக்கின்றன.

மலையடிவாரத்து இரயில் நிலையமாகையினால் மெல்ல மெல்லக் குளிர் உறைக்கத் தொடங்கியிருந்தது. புகை படர்வது போல் கண்ணெதிரே தெரியும் தோற்றங்களைப் பனி மூடியிருந்தது. இரயில் சக்கரங்கள் உரசி உரசித் தேய்ந்த இருப்புப் பாதைகள் அந்த இருட்டிலும் வெள்ளிக் கோடுகளாய் நெடுந்துாரத்துக்கு மின்னிக் கொண்டிருந்தன. அந்த இடத்திலிருந்து அறுபது மைல் தொலைவு பயணம் செய்து மல்லிகைப் பந்தலுக்குப் போகவேண்டும். இரயிலிலிருந்து இறங்கியவுடன் சாயங்காலம் மேலே மலைக்குப் போகிற கடைசிப் பஸ்ஸிலேயே அவன் போயிருக்க வேண்டும். தற்செயலாய்ச் சந்திக்க நேர்ந்த நண்பன் ஒருவனிடம் பேசிக் கொண்டிருந்ததில் பஸ் தவறிவிட்டது. இரயில் நிலையத்திலிருந்து வெளியேறிப் படி இறங்கினால் எதிரே பஸ் ஸ்டாண்டுதான். அவ்வளவு அருகில் இருந்தும் மிகச்சில விநாடிகளில் பஸ்ஸைத் தவற விட்டுவிட்டான் அவன். நண்பனைத் தவறவிட்டிருந்தால் பஸ் தவறியிருக்காது. பழகிய நண்பனைத் தவறவிடமுடியாத காரணத்தால் பஸ் தவறிவிட்டது.

"சத்யம் எங்கே இந்தப் பக்கம் இப்படி அபூர்வமாக..." என்று கேட்டுக் கொண்டே முகத்தில் ஆச்சரியமும் மலர்ச்சியும் தோன்ற எதிரே வந்துவிட்ட நண்பனை எப்படிப் பார்க்காததுபோல் போய்விட முடியும்? நண்பனோடு பேசி அனுப்பிவிட்டு இரயில் நிலையத்திலிருந்து வெளியேறிச் சென்று பார்த்தபோது, பஸ் போயிருந்தது. அவனுடைய வாழ்க்கையில் எத்தனையோ பல நல்ல சந்தர்ப்பங்கள் இப்படிக் கடைசி விநாடியில்தான் தவறியிருக்கின்றன. இன்றைக்கு இந்தப் பயணமும் அப்படித்தான் தவறிப் போய்விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/8&oldid=1357815" இலிருந்து மீள்விக்கப்பட்டது