பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104 ⚫ போதி மாதவன்

அநோம நதிக்கரையிலேயே இருந்தது. கண்டகமும் கண்ணீர் பெருக்கித் தள்ளாடிக் கொண்டே, மெல்ல மெல்ல நடந்து சென்றது? வழியிலே அது புல்லைத் தீண்டவில்லை, நீரும் பருகவில்லை அடிக்கடி திரும்பி வள்ளல் வசிக்கும் வனத்தை எண்ணிக் கனைத்துக் கொண்டிருந்தது.

பார்க்கவர் தவப் பள்ளி

சந்தகன் அகன்ற பின், சித்தார்த்தர் பார்க்கவரின் ஆசிரமத்திற்குச் சென்று, அங்குள்ள தவமுனிவர்களை வணங்கி, அவர்களுடன் அளவளாவிப் பேசிக்கொண் டிருந்தார். காவியுடையிலும் அவருடைய கம்பீரம் குன்ற வில்லை. அவருடைய முகப் பொலிவைக் கண்டு தாபதர் அனைவரும் அவரிடம் அளவற்ற அன்பு கொண்டு மரியாதை செய்தனர்.

தவப் பள்ளியிலே முனிவர்கள் பலப்பல முறைகளில் தவம் புரிவதை அறிய வேண்டும் என்று கருதிச் சித்தார்த்தர் அவர்களைப் பார்த்து, ‘இன்று தான் நான் தவப் பள்ளியை என் வாழ்க்கையில் முதல் முறையாகப் பார்க்கிறேன். தவமுறைகள் எவையும் எனக்குத் தெரியாததால், தயைகூர்ந்து தாங்கள் இங்கே புரிந்துவரும் தவத்தைப் பற்றி அடியேனுக்கு விவரமாக எடுத்துரைக்க வேண்டுகிறேன்’ என்று விநயமாகக் கேட்டுக் கொண்டார்.

வேதியராகிய பார்க்கவர் தாமும் மற்றவர்களும் மேற் கொண்டுள்ள தவமுறைகளை விளக்கிக் கூறினார். உழுது பயிரிட்டு விளையும் உணவுப் பொருள்களை அவர்கள் தீண்டுவதில்லை. காட்டில் தாமாக விளைந்துள்ள தானியங்களையும், காய்கள், கனிகள், இலைகள், கிழங்குகளையுமே புசித்து வந்தார்கள். சிலர் மான்களைப் போல்