பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108 ⚫ போதி மாதவன்

மகத நாட்டில் பாண்டர மலைக் குகையிலே தவப் பள்ளியில் வைகும் ஆலார காலாமரைச் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு, அவர் காட்டுச் சாலை வழியாக நெடுந்தூரம் நடந்து கொண்டேயிருந்தார் வழியிலே ஓய்வெடுத்துக் கொள்வதற்காக ஒரு மரத்தின் நிழலில் சிறிது நேரம் தங்கினார்.

அந்த இடத்திலே கபிலவாஸ்துவிலிருந்து புறப்பட்டு வந்திருந்த அரசருடைய குலக் குருவும், மந்திரியும் அவரைக் கண்டு, அருகே சென்று அமர்ந்தனர். அவரும் அவர்களை முறைப்படி வரவேற்று வணக்கம் கூறினாள். அவர்கள் அரசரின் பிரதிநிதிகளாக வந்திருந்தனர். ‘உமது மைந்தரோடும், அவருடைய விதியோடும் போராடி, அவரைத் திரும்ப அழைத்துவர எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம்!’ என்று அவர்கள் சுத்தோதனருக்கு வாக்குக் கொடுத்துவிட்டு வந்திருந்தனர்.

கபிலை நிகழ்ச்சிகள்

சந்தகன் குதிரையோடு தனியே தலைநகருக்குத் திரும்பியபோது நகரமக்கள் அனைவருமே அவனை வெறுத்துப் பேசினர். ‘எல்லோரும் திரண்டு வனத்திற்கு ஏகுவோம்!’ என்று கிளம்பினர். அரண்மனையில் கண்ணீர் விட்டுக் கதறிக் கொண்டிருந்த ஆடவர், பெண்டிர் அனைவரும் அவனையும் குதிரையையும் பழித்தனர். சந்தகன் தானும் அழுது கொண்டே எல்லோர்க்கும் சமாதானம் கூறினான்.

தேவி யசோதரை துயரத்தால் உளம் நொந்து, கோபத்தால் கொதித்துக் குமுறலானாள்: ‘சந்தகா! என் இதய நாதனை எங்கே விட்டு வந்தாய்? நல்லவனைப் போல இங்கே ஏன் அழுகிறாய்? கொடியோய்! இரக்கமின்றி எனக்குத் துரோகம் செய்து அவரை அழைத்துப் போனதற்கும் இந்தக் கண்ணீருக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? இளவரசருக்கு நீ ஏற்ற நண்பன் தான்!