பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கௌதம பிக்கு ⚫ 113

‘அரண்மனையில் இருந்து கொண்டே துக்கம் நீங்கி முக்தி பெற முயல்வது நடவாத காரியம். விடுதலை சாந்தியிலிருந்தே விளையும். அரசனாயிருத்தல் துயரத்தை யும் பாவத்தையும் பெருக்கிக் கொள்வதிலேயே முடியும்.[1]

‘துறவறம் பூண்டு வனத்தில் வசிக்கையில் அரச போகங்களில் ஆர்வம் கொள்ளலும் இயலாத காரியம். இவ்விரண்டும் முரண்பாடானவை; நீரும் நெருப்பும், ஓய்வும் இயக்கமும் போல, இவை சேர்ந்திருக்க முடியாது.


  1. ஜலா லுத்தீன் ரூமி என்ற பாரசீகக் கவிஞர் இதே கருத்தை அமைத்து ஒரு பாடல் இயற்றியுள்ளார். அவர் கூறும் விவரம் பின்வருமாறு :
    இப்ராஹிம் மன்னர் ஆட்சி புரிந்த காலத்தில், ஒரு நாள் அவர் அரண்மனையிலே அரியாசனத்தில் அமர்ந்திருந்த போது, மாடியில் பல மனிதர்கள் ஓடிச் சாடும் அடியோசைகளும், கூக்குரல்களும் கேட்டன. அவர் ஆசனத்திலிருந்து இறங்கி ஒரு சாளரத்தின் வழியாக உயரே யிருந்தவர்கள் எவர்கள் என்று விசாரித்தார். உயரேயிருந்த அரண்மனைக் காவலர்கள் நடுக்கமுற்று, அரசருக்குத் தலைவணங்கி, ‘நாங்கள் தாம்- காவலர்கள்–தேடிக் கொண்டிருக்கிறோம்!’ என்று கூறினர்.
    ‘என்ன தேடுகிறீர்கள்?’
    ‘எங்கள் ஒட்டகைகளை!’
    ‘அரண்மனை மாடியில் ஒட்டகைகள் இருக்குமென்று எவர்களேனும் தேடுவார்களா?’
    ‘தங்களைப் பின்பற்றியே இவ்வாறு செய்கிறோம். சிம்மாசனத்தில் இருந்து கொண்டே தாங்கள் சுவர்க்கத்திற்குச் செல்ல முயல்வதைப் போலவே, நாங்களும் முயற்சி செய்கிறோம்!’