பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிம்பிசாரர் ⚫ 127

வேற்றச் சித்தமாயுள்ளேன். தாங்கள் மனமுவந்து சம்மதிக்க வேண்டும்.

‘சாக்கிய குல திலகமாகிய நீங்கள் பிறருடைய இராஜ்யத்தை ஏற்றல் இழுக்கு என்று கருதினால், எண்ணற்ற படைகளைத் திரட்டிப் போர்த் தொழிலில் இறங்குங்கள். அதற்கும் உதவியளிக்க நான் சித்தமாயுள்ளேன்.

இன்பம், செல்வம், அறம் மூன்றுமே இம்மையில் நாம் அடையத்தக்க பயன்கள். அறம், பொருள், இன்பங்களை அனுபவித்தவரே நிறைந்த மனிதர்; வீட்டுப் பேற்றை விரும்பி முயலவேண்டியர்கள் அவர்களே.

‘வில்லேந்த வேண்டிய தங்கள் கைகள் வீணாகச் சோம்பியிருக்க வேண்டாம். இந்த உலகம் கிடக்கட்டும்–மூவுலகையும் வெற்றிகொண்டு ஆள முற்படுங்கள்!

‘உங்களிடம் விளைந்த அன்பினால் நான் இதைக் கூறுகிறேன்; ஆதிக்கிய ஆசையாலன்று. உங்கள் துவராடையைக் கண்ட பிறகு, அன்பினால் என் உள்ளம் உருகிக் கண்களில் நீர் பெருகுகிறது.

இப்போது இன்பங்களை நுகர வேண்டிய பருவம். பின்னால் கொள்ள வேண்டியதே பெருந்துறவு. இளமைக்கு ஏற்றவை இன்பங்கள்; நடுவயதுக்கு ஏற்றது செல்வம்; முதுமைக்கு ஏற்றது துறவு என்றே ஆன்றோர் வகுத்துள்ளனர்.

‘இளமையிலே புலன்கள் விரும்பிய திசையெல்லாம் பாயக்கூடியவை. இன்பங்கள் எங்கெங்கு கிடைக்குமோ அங்கெல்லாம் அவைகளைப் பற்றிக் கொள்ள வேண்டும். செல்வமும் துறவும் இளமையின் இலட்சியங்கள் அல்ல.’

மகத மன்னரின் அன்பும் ஆர்வமும் கௌதமர் உள்ளத்தைக் கவர்ந்தன. ஆயினும் அவருடைய உரை