பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆறு ஆண்டுகளின் அருந்தவம் ⚫ 147

காலத்தில் சச்சகர் என்ற ஜைனருக்கு அவர் கூறிய வரலாறுகளிலிருந்து தெரிகிறது.[1]

சினேந்திரராகிய கௌதமர் பற்களை இறுகக் கடித்து, மேல் வாயோடு நாவை அழுத்திக்கொண்டு, மனத்திலே தீய எண்ணங்கள் தோன்றாமல், நல்ல எண்ணங்களை நினைத்துக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய அக்குள்களிலிருந்து வியர்வை பெருகி வழிந்து கொண்டிருந்தது. பலமுள்ள ஒருவன் மெலிந்தவன் ஒருவனைத் தோள்களையும் தலையையும் பிடித்துக் கீழே தள்ளி அழுத்துவது போல், அவரும் இந்த முறையில் மனத்தோடு போராடிக் கொண்டிருந்தார். அந்நிலையிலும் அவருடைய சக்தி குன்றாமலும், பணிந்து விடாமலும் இருந்து வந்தது. ஆயினும் உடல் களைப்புற்றுச் சோர்ந்துபோய் விட்டது. எவ்வளவு வேதனை ஏற்பட்ட போதிலும், அவர் மனம் நிலைகுலையாமல் நின்றது.

பின்னர் மூச்சை அடக்கப் பயிற்சி செய்தார். வாயாலும் நாசியாலும் மூச்சு வாங்கி விடுவதை அறவே நிறுத்தி விட்டார். காற்று வெளியேறுவதற்காகக் காதுகளின் வழியாகப் பெரிய இரைச்சலுடன் கிளம்பி வந்தது. கொல்லன் உலையிலே துருத்தி ஊதுவதுபோல் செவிகளில் ஓசையுண்டாயிற்று. அப்போதும் அவர் ஆற்றல் குன்றவில்லை; மன உணர்வும் கலங்கவில்லை. பின்னர் அவர் மூச்சை அறவே நிறுத்திப் பழகினார். மூக்கு, வாய், செவி எல்லாவற்றையும் அடைத்து விட்டதால், உடலின் உள்ளேயிருந்த வாயு வெளியேற மார்க்கமில்லாமல் ஒரேயடியாக மூளையைப் போய்த் தாக்க ஆரம்பித்தது. பலசாலி ஒருவன் கூர்மையான முனையுள்ள வாளைக்கொண்டு குடைவது போல் மண்டையில் வேதனை உண்டாயிற்று. அப்போதும் வேதனைகளால்


  1. மஜ்ஜிம நிகாயம்-மகா சச்சக சூத்திரம்’